பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

87

இருளைப் போக்கி மனிதப் பண்புகளை மலரச் செய்கிறோமா அல்லது வேறு வகையில் அப்பொறிகள் ஊக்கப்படுத்தப்படச் சூழல்கள் அமைகின்றனவா என்பதுதான் முக்கியம். இன்றைய வணிகச் சூழல் பணத்தையே இலக்காக்கியிருக்கிறது.

இன்றைய தாய்... அவளுக்கே அவள் தொலைந்து போனவளாக, பெரும்பாலும் ‘மம்மி’ என்ற குரலுக்கு விடையளிக்க வேண்டியவளாக இருக்கிறாள். காலத்தின் கட்டாயத்தில் பொருளாதாரம் சார்ந்த வசதித் தேவைகளுக்காக அன்றையத் தாய் தொலைந்து போனாள்.

அந்நாட்களிலும் உழைப்பாளித் தாயார் இருந்தனர். முற்றத்தில் சாணம் தெளித்துத் தூய்மை செய்தபின் பழங்கஞ்சியைக் குடித்து விட்டுப் பால் குடிக்கும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வயலுக்குப் போவாள். பிள்ளை மரக்கிளையில் பழைய சீலைத் தொட்டிலில் கிடக்கும். அதற்குப் பசி எடுக்கும் நேரம் அறிந்து வந்து அமுதூட்டுவாள். பிள்ளைகளோ, பெண்களோ, திறந்தவெளிகளில் மண்ணில் இஷ்டம் போல் விளையாடி மகிழ்ந்தார்கள். ஆடு மாடு மேய்த்த காலங்களில் கண்ட கனவுகளில்கூட தாய் அருகில் இல்லை என்ற வெற்றிட உணர்வுக்கு இடமிருந்திருக்கவில்லை. திருவிழாக் காலங்களில் வறுமையில் மலர்ந்த பொட்டுக்கடலை மிட்டாயும், ரோஸ்ரிப்பனும் ஊதாங்குழலும் பெருநிதியம் கிடைத்த மகிழ்ச்சிச் சிறகுகளாய் விரியும்.

இந்நாட்களில் அந்தக் குழந்தைப் பருவங்கள் எங்கொழிந்தன? அம்மாவின் வயிற்றில் கரு உருவாகும் போதே போராட்டம் தொடங்கிவிடுகிறது. இது, பெண்ணா, பிள்ளையா? தாய் வெளிக்குத் தெரியாமல் உருகி அலைபாய்கிறாள். பொருளாதார வாய்ப்புகளையும்