பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

புதியதோர் உலகு செய்வோம்

குழந்தைப் பள்ளிகள், அவற்றோடு இணைந்த சேய் காப்பகங்களையும் கண்டேன். அநேகமாகத் தாய்மார் எல்லோருமே வேலைக்குச் சென்றார்கள். வேலைக்குச் செல்வதனால் குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லையே என்ற குறை இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் குழந்தைகள் நாட்டின் செல்வமாகக் கருதப்பட்டார்கள். தாயும் தகப்பனும் பிள்ளையைத் தூக்கிச் சென்று அருகாமையில் இருந்த காப்பகப் பள்ளியில் விட்டுவிட்டுச் செல்லும் காட்சி மிக இயல்பாக இருந்தது. கூடுவண்டி, தள்ளுமுள்ளு எதுவுமே இல்லை.

இந்தப் பள்ளிகளுக்குள் நுழைந்தால், அற்புதக் காட்சிகளே விரியும். ஏழை, பணக்காரர் என்ற நிலையோ, சீருடைச் சமாசாரங்களோ இல்லாத சுதந்தரங்கள். விரிந்து பரந்த பூங்காவாக, மண்ணில் விளையாட ஆசையுடன் நடப்பதற்கு உகந்ததாக, நீரில் விளையாடக்கூடிய சிறு நீச்சல் குளங்களுடன் இருந்தன. இங்கே பணிபுரிந்த அன்னையர், செவிலியர், மருத்துவம் பயின்றவர், மழலைக் கான ஆடல்பாடல்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர். ‘விருந்தினர் வருவதாக’ முன்கூட்டி அறிவிப்பு எதுவும் செய்திராத நிலையில்தான் நானும், மற்ற இரு பெண்களும் சென்றோம். சிரிப்பும், பாட்டும், களிப்பும், நாணமும் தயக்கமும் தவிர எந்தக் கடுமையையும், எங்கும் பார்க்கவில்லை. ஒரு காப்பகப் பள்ளியில் கட்டிடத்துக்குள் சென்று, பல்வேறு விளையாட்டுச் சாதனங்களுடன் ஆடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தோம். அப்போது, இன்னொரு கட்டிடத்துக்குள் இருந்து அழுகுரல்களும், பாட்டொலியும் தாள ஒலிகளும் மென்மையாகச் செவிகளில் விழுந்தன. நான் அந்த வாயிலுக்குள் நுழைந்தேன். எட்டிப் பார்த்தேன்.