பக்கம்:புதிய கோணம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கோணம் 7

மலையிடைப் பிறவா மணியே, யாழிடைப் பிறவா இசையே’ என்றெல்லாம் கணவன் பாராட்டுகின்றான். காட்டில் வரிக்கூத்தில் ஈடுபட்டுள்ள வேடுவர்கள், கணவனோடு இருந்த மணமலி கூந்தலை உடையவளாகிய அப்பெருமாட்டியைக் கண்டு, “இவளோ, கொங்கச் செல்வி, குடலையாட்டி, தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து, ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி’ என்று போற்றுகின்றனர். முற்றத் துறந்த கவுந்தி அடிகளோ எனில், “கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்’ என்று புகழ்கிறார்.

தாம் பிறந்து வளர்ந்த ஊராகிய காவிரிப் பூம்பட்டினத்து மகளிராலும், மணஞ்செய்து கொண்ட கணவனாலும், கற்றறிவில்லாதவர்களாயினும் வஞ்சகம் இல்லாமல், பொருளைக் கண்டு மனத்துட் பட்டதை அஞ்சாது வெளியிடும் இயல்பு வாய்ந்த வேடுவர்களாலும், முற்றத்துறந்த முனிவராகிய கவுந்தி அடிகளாலும் ஒருசேரப் புகழப்பெறும் இயல்புடையார் இத் தேவியார்.

அவருடைய வாய்மொழியைக் கொண்டே அவருடைய உள்ளப்பாங்கை அறிய வேண்டு மானால், அதற்கும் சில வாய்ப்புகள் இருக்கின்றன. முற்பகுதி முழுவதிலும், கணவனையன்றி வேறொரு தெய்வத்தைக் கனவிலும் கருதாதவராய் வாழ்ந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/15&oldid=659855" இலிருந்து மீள்விக்கப்பட்டது