பக்கம்:புதிய பொலிவு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ளோடே......!' என்று எதற்கும் எரிச்சலுடன் பதில் பேசுவாள். உடம்பு 'கசகச' வென்றாகிவிட்டதே, கழுவித் தொலைப்போம் என்றுதான் மடுவில் இறங்குவாள்—முன்புபோல மகிழ்ச்சியுடன் அல்ல.

அவளுக்கு வேலப்பனைப் பார்க்கவே பயமாக இருந்தது.

என்ன வேதனைப்படுகிறானோ, எவ்வளவு கோபமாக. இருக்கிறானோ, இந்த நேரத்திலே போய்ப் பேசினால், அவனுக்கு மேலும் வேதனைதான் கிளம்பும்; மேலும் என்ன வென்றுதான் பேசுவது; போனாபோவுது, கிழங்கு விலை போகாவிட்டா என்னா, கரும்பு இல்லையா, புகையிலையிலே... பணம் வராதா, என்று தைரியம் பேசமுடியும். அதையே அல்லவா அவன் நம்பிக்கொண்டிருந்தான். வேறு வழி ஏது? அந்த வேதனையை மாற்றமுடியுமா? என்று எண்ணினாள், இந்தச் சமயம் அடிக்கடி சென்று வேலப்பனைப் பார்ப்பதுகூடச் சரியல்லவென்று எண்ணிக்கொண்டாள்.

"நான் இருக்கிற இருப்புக்கு இப்ப கண்ணாலம் ஒண்ணு தான் குறைச்சல். எது எப்படிப் போனாலும் என்ன, என் பின்னோடு சுத்திக்கிட்டுத்திரி என்கிறயா? தா! புள்ளே! என் எதிரே நின்னுகிட்டு இப்படி பல்லைக் காட்டாதே. நான் இருக்கற ஆத்திரத்திலே எனக்கு அரிவா மேலேதான் கவனம் போவுது. அடி அம்மா! மவராசி! கொஞ்சம் உன்னோட அலுக்கு குலுக்கை யெல்லாம் அடக்கி வைச்சிரு..." என்று ஏதாவது கோபத்திலே ஏசுவான் என்றபயம் செல்லாயிக்கு. அதனாலே, அவனை அடிக்கடி சந்திப்பதைக் குறைத்துக் கொண்டாள்; பார்க்க நேரிடும்போதும், பழகாதவள் போல கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு வந்துவிடுவாள்.

"எல்லாம் இருக்கிறவரையிலேதான் மக்கமனஷாள், சுற்றம் உறவு எல்லாம், பாரேன், இந்த செல்லாயியை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/15&oldid=1575585" இலிருந்து மீள்விக்கப்பட்டது