பக்கம்:புதிய பொலிவு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

நாளைக்கு நாலு தடவையாவது ஓடியாந்து நச்சரிப்பா, இப்பஎன்னடான்னா, பார்த்தும் பார்க்காத மாதிரியாப்போறா, பழகாதவ மாதிரியா நடந்துக்கொள்றா; பவன் நகை இனி கிடைக்காது என்கிறதாலே, வேண்டா வெறுப்பாப்பேசறா. இவ்வளவுதான் இதுகளோட சுபாலம். நம்ம போறாத வேளை, இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும் என்று வேலப்பன் எண்ணிக் கொண்டான், வேதனை, மேலும் வளர்ந்தது.

ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளாததாலேயே, சந்தேகமும் சஞ்சலமும் இருவருக்கும் வளர்ந்தது. அதிக நாட்கள் இதை நீடிக்க விடக்கூடாது, ஒருநாளைக்கு அவளை வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாகக் கேட்டுவிட வேண்டியதுதான் என்று வேலப்பன் முடிவு செய்து, நாளைக்கு அந்த வேலைதான் முதலில் என்று எண்ணினான்; அவனை அந்த வேலையைச் செய்யவிடாமல் தடுத்திட, வேறோர் அவசரவேலை குறுக்கிட்டது.

"ஓட்டு கேட்கறபோது தினுசு தினுசான மோடாரிலே, இங்கே வந்து, கெஞ்சிக் கூத்தாடினானுங்களே, பெரிய மனஷனுக, இப்ப பார்த்தாயா, கழனி காஞ்சி போனாலும், குளம் வத்திப்போனாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும், என்னடாப்பா கஷ்டத்துக்குக் காரணம்? நான் என்னா செய்யணும், சொல்லு? அப்படின்னு கேட்க ஒருத்தன் வந்தானா பார்த்தயா? எல்லாம், 'ஓட்டு' வரைக்கும்தான், இவனுங்களோட ஒட்டு உறவு" என்று துவக்கினான் ஒருவன்—வேலப்பன் குடிசையில்.

"ஆமாம், அப்பொ, ஆயிரத்தெட்டு சிபாரிசு பேசினானுக...கவுண்டரே கவனிச்சிக்கங்க...கோனாரே, கை போட்டுக் கொடுங்க, தேவரே, என்னை உங்களுக்கு இருவது வருஷமாத் தெரியுமே, என்றெல்லாம் சொந்தம் பேசினானுங்க..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/16&oldid=1575586" இலிருந்து மீள்விக்கப்பட்டது