பக்கம்:புதிய பொலிவு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உனக்கு வேணுங்கிறதையும் நாங்க கொடுத்தாச்சி. எங்களை இத்தோடு விட்டுடு.....மானமாவது தக்கட்டும்...."

கமிட்டியினர் கடுங்கோபத்துடன் செல்வது கண்டு கொடிமரத்தான் பயந்துபோனான்—திரும்பி அதே கிராமத்திலே நடமாடவேண்டுமே!

வேலப்பனுக்குத்தான் இதனால் அதிகச் செலவு; கிழங்கு 'கால்வாசி' விலைக்குக் கூடப் போகவில்லை,'முட்டுவழி' கட்டி வரவில்லை, கிழங்குப் பிரச்னையைத் தீர்த்துவைக்க எடுத்துக்கொண்ட முயற்சியால் கடன் வேறு; வேலப்பன் கலியாணத்தைப் பற்றிய எண்ணத்தையே விரட்டி அடித்தான்; செல்லாயியால் கண்ணீர் சுரப்பதைத் தடுக்க முடியவில்லை; கன்னம் அந்த முத்துக்களைத் தாங்கிக்கொள்ள மனமின்றி, நெஞ்சிலிருந்து கிளம்பியவை அங்கேயே போய்ச் சேரட்டும் என்று அனுப்பிவிட்டது.

"வேலப்பா! ஏண்டாப்பா! இதுக்கெல்லாமா, மனசைத்தளர விட்டுவிடறது. இதுவரையிலே நான் இதுபோல எத்தனை கஷ்டத்தைத் தாங்கிகிட்டேன், காஞ்சி இருக்கும், மழையாப் பொழிஞ்சி அழிச்சி இருக்கும், மாடுகண்ணு 'கோமாரி'யிலே செத்திருக்கும், மனஷாளுகளே மாண்டு போயிருக்காங்க பலமாதிரி நோயாலே........அதுக்காக இப்படியா, மனசு ஓடிஞ்சி போயிட்டேன். பைத்யக்காரப் புள்ளே! போயி, காரியத்தைப் பாரு. இந்தத் தடவை இல்லாட்டா, அடுத்த வருஷம் நல்லது ஏற்படுது என்னா இப்ப? உனக்கு என்னடா குறைச்சல்! எனக்கு இந்தத் தடவை சோளம் 'நல்லபடி இருக்குது—போதுமே நமக்கு"—என்று சடையாண்டி பலமுறை ஆறுதல் கூறியும், வேலப்பனுக்குத் திருப்தி ஏற்படவில்லை; விசாரம் அவனை வாட்டியபடி இருந்தது. காரணமின்றிக் கோபம் வரும்; கண்டவருடன் வம்புக்குப் போகத் தோன்றும்; மாடு கன்றுகள்கூட அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/23&oldid=1576194" இலிருந்து மீள்விக்கப்பட்டது