பக்கம்:புதிய பொலிவு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

போதும் கண்சிவந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தமயந்தி "அவர் வேண்டாமென்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்" என்று டிராமா காண்ட்ராக்டர்களுக்குக் கூறி, புதிய அந்தஸ்துக்குச் சென்றுவிட்டாள். ஊர்மக்களிடம் தான் அவள் முன்புபோல, தாராசசாங்கம், சாரங்கதாரா, அல்லி அர்ஜுனா, சந்திரமதி ஆகியவைகளை நடித்துக்காட்டவில்லையே தவிர, வீட்டில் எல்லாம்தான்!

ஆறுபவுனாம்!—என்று கூறி அலட்சியமாகச் செயினைத் தமயந்தியிடம் தருவான் வேலப்பன், ஆறோ, நூறோ உங்கள் அன்புதான் எனக்குப் பெரிது, இந்த நகை யாருக்கு வேண்டும்... என்று நாடகமாடாக்குறையை ஓரளவுக்கு நீக்கிக் கொள்ளும் முறையில் பேசுவாள். அட, அட. அதென்ன அப்படிப் பார்க்கறே!—என்று வேலப்பன் கேட்கவேண்டிய கட்டம் நடக்கும்—உஹும் என்பாள்—அடிஅம்மா!—என்பாள், இப்படி நவரச நாடகம் நடைபெற்றபடி இருக்கும்.

தமயந்தி, நாடக வாய்ப்பும் கிடைக்காமல், நல்ல ஒரு சம்பந்தமும் கிடைக்காமல் திண்டாடியபோது, அவளை ஏறெடுத்துப் பாராமல் இருந்தவர்களும், ஏளனம் பேசியவர்களும், வேலப்பனுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்ட பிறகு, அவளிடம் 'ஆசை' கொள்ள ஆரம்பித்தார்கள்.

நல்லாத்தான் இருக்காடா! நாற்பது வயசுன்னு நாம் நையாண்டி செய்தா போதுமா, நேத்து சாயரட்சை அவ, நவக்கிரகம் சுத்தறதுக்கு வந்தா கோயிலுக்கு ; எப்படி இருக்கிறா தெரியுமா? இருவது இருவத்தைஞ்சிதான் மதிப்புப் போடுவாங்க வயசு—என்று கூறி ரசிக்க ஆரம்பித்தார்கள்.

நாடகக் காண்ட்ராக்டுகள் எடுத்து எடுத்து நொடித்துப் போனவர், பாலு வாத்தியார். பல ஆயிரக்கணக்கிலே பணத்தை நாடகக் காண்ட்ராக்டிலே பாழாக்கிவிட்ட பிறகு அவருக்குக் கிடைத்த பட்டம் அந்த வாத்தியார் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/36&oldid=1576222" இலிருந்து மீள்விக்கப்பட்டது