பக்கம்:புதிய பொலிவு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நாட்டிலே கீர்த்தியுடன் உள்ள நடிகர்கள் ஒவ்வொரு வரும், பாலு வாத்தியாரால்தான், முதலில் கைதூக்கி விடப்பட்டவர்கள் என்று பெயர் உண்டு. அவர் அந்தப் பழைய சம்பவங்களைக் கதை கதையாகச் சொல்லுவார். தன்னாலே முன்னுக்கு வந்தவன் பிறகு தன்னை மதிக்காமல் நடந்து கொண்டால், உடனே வேறு ஒரு ஆளைத் தயார்செய்து, அவனுக்கு நிறைய விளம்பரம் கொடுத்து, மெடல் கொடுத்து, மாலை கொடுத்து போட்டிக்குக் கிளப்புவதிலிருந்து, கொட்டகை கிடைக்காமலிருக்கும்போது, எப்படித் தந்திரம் செய்து கொட்டகையைப் பெறுவது என்பது வரையிலே அவர் சுவைபட எடுத்துக் கூறுவார். இடையிடையே இருமல் வரும், அதைமட்டும் பொறுத்துக்கொள்ளவேண்டும்.

தமயந்திக்கு, வேலப்பனிடம் தொடர்பு ஏற்பட்டதாலே ஒரு புது 'மவுசு' வந்திருப்பது தெரிந்து, தனக்காக ஒரே ஒரு ஸ்பெஷல் டிராமாவுக்குமட்டும் தமயந்தி ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

"வாத்தியாரே! அதென்ன எனக்கு நீங்க இவ்வளவு சொல்லணுமா? முதமுதலிலே நான் மாதவி வேஷம் போட்டனே, அண்ணக்கி, என் காலுக்கு உங்க கையாலேதான் 'சதங்கை' கட்டி ஆசீர்வாதம் செய்திங்க. அதை எல்லாம் நான் எப்படி மறந்துடுவேன்"

"செய்த நன்றியை மறக்காதவர்களைத்தான் மனஷாளு என்று சொல்லியிருக்கு தமயந்தி. உனக்கும் தெரியுமே ஓரடி வீராசாமி பாடுவானே ஒரு பாட்டு கவனமில்லே, தோடியிலே,

நன்றி செய்தாரை என்றும்
மறவாதே
நாயினும் கேடுகெட்டு
நாசமாகாதேன்னு....."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/37&oldid=1576224" இலிருந்து மீள்விக்கப்பட்டது