பக்கம்:புதிய பொலிவு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

"ஆமாம். ரொம்ப நல்லாப் பாடுமே வீராசாமி. இப்ப எங்கே பேரே காணோம்?"

"எப்படிப் பேர் நிலைக்கும். பாட்டுத்தான், செய்த நன்றியை மறக்காதேன்னு, செய்கை அப்படி இல்லையே. அதனாலே ஆசாமி ரொம்ப ‘டல்'லாயிட்டான். இப்பத்தான் மறுபடியும் புத்தி வந்து, காலிலே விழுந்தான், செய்ததை மறந்துடுங்கன்னு, இப்ப, நான் உன்னை ஒரு ஸ்பெஷலுக்கு வற்புறுத்திக் கூப்பிடுவதுக்கு இதுவும் ஒரு காரணம். அந்தப் பயதான் ராஜபார்ட், தெரியுதா அவனை ஒரு மடக்கு மடக்கோணும்—ஆசாமி, அசந்து நிற்கணும்..... அப்படி கன ஜோரா இருக்கணும்..."

"உங்க ஆசீர்வாதம். ஆனா அவன் 'தோடி' பாடி ஜனங்களை ஏமாத்திப் போடுவான்...."

"அட, நீ, மோகனத்திலே பிடி......பய, சுருண்டு கீழே விழறான் பாரு...உனக்கு இந்த இரகசியம் தெரிஞ்சி இருக்கட்டும்—பயலுக்கு இப்ப குளறுவாயாயிட்டுது—ள வெல்லாம் ல தான்....ழாவே நுழையாது..."

"எனக்கு எப்பவுமே பயம் கிடையாதே. அப்பேர்பட்ட ஆர்ப்பாட்ட ராஜபார்ட் அய்யாக்குட்டியோட தூக்குத்தூக்கி போட்டு யாராலும் சமாளிக்கவே முடியாதுன்னு சொன்னாங்களே, கவனமிருக்கா வாத்தியாரே! காட்பாடியிலே சுருளிமலை மேலே உருளும் இருளனவன்....என்கிற பாட்டுப் பாடி, 'கள்ள பார்ட்' செய்தனே...."

"பய, மூஞ்சி செத்துப் போச்சே"

"அதனாலே, எனக்கு இந்த ஓரடி, ஒன்பதடி எல்லாம் பத்திக் கவலையில்லே......இது இருக்கே, என்னோட வீட்டுக்காரு, உசிரு என்மேலே. அது வந்ததிலிருந்து நான் அய்யனார் சாட்சியா, மனசாலேகூடத் தப்பா நடந்ததில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/38&oldid=1576227" இலிருந்து மீள்விக்கப்பட்டது