பக்கம்:புதிய பொலிவு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

மாகிவிட்டேன். செல்லியின் உலகம் வேறு—என்ற தீர்மானமான முடிவுக்கு, 'ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை' என்ற தீர்ப்பு கிடைத்த அன்றே வந்து விட்டான்.

செல்லிக்கு, 'பைத்யம்' பிடிக்கவில்லை—அதுதான் ஆச்சரியம். அவளுடைய மனதுக்கு இந்தச் சேதி எவ்வளவு பெரிய பேரிடி என்பதை அந்தக்கிராமம் அறியும். வேலப்ன் வேகமாகக் கெட்டு வருகிறான் என்ற செய்தி, கிடைத்த ஒவ்வோர் தடவையும், செல்லி, செத்துச் செத்துப் பிழைத்து வந்தாள்—ஒரு வருஷம் கடுங்காவல் என்று கேள்விப்பட்ட போது, அவளால் எதையும் சாகடிக்க முடியவில்லை—ஏற்கனவே எல்லாம் செத்துக்கிடந்த நிலை.

சடையாண்டியும், செல்லியின் திருமணம் என்பது, இனிச் செய்து தீரவேண்டிய ஒரு கடமை, சடங்கு, ஊர் உலகத்துக்காகச் செய்தாக வேண்டிய ஏற்பாடு என்று தான் கருத முடிந்தது. காய்ச்சல் வந்தவனுக்குத் தெரியும், வாய்க்கசப்பு இருப்பதும், எதைச் சாப்பிட்டாலும், பிடிக்காது என்பதும், என்றாலும், கஞ்சி குடித்துத்தீரவேண்டி இருக்கிறதல்லவா! செல்லிக்கும் ஒரு கலியாணம் செய்து தானே ஆகவேண்டும் என்று சடையாண்டி எண்ணியது, அதே முறையிலேதான்.

அவனுக்கா? எனக்கு இஷ்டமில்லை.

எனக்கு அவன் ஏற்றவனல்ல; அவனோடு என்னாலே குடித்தனம் செய்ய முடியாது—என்று கூறி, பெற்றோரை எதிர்த்துப் போராடியாவது, தன் மனதுக்கு இசைந்தவனை, தன்னை உண்மையாகக் காதலிப்பவனைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்று கூறும், நிலையில் செல்லி இல்லை.

எனக்கு அவர்தான் வேண்டும்—என்று வேலப்பன் இருந்தால்தானே போரிட! வேலப்பன் எங்கே இருக்கிறான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/40&oldid=1576231" இலிருந்து மீள்விக்கப்பட்டது