பக்கம்:புதிய பொலிவு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சிறையிலிருந்தாலும் பரவாயில்லை, ஏதோ காலக்கோளாறு—கயவர் சூது—ஆத்திரத்தால் அறிவு இழந்த நிலை—இப்படி ஏதேனும் ஒரு சமாதானம் செய்துகொள்ள முடியும்—அவன் தான் வேண்டும் என்றுவாதாட முடியும். வேலப்பன் சிறையில் இருப்பவன் மட்டுமல்ல— எல்லா நற்குணங்களும் சிதைந்துபோய் உள்ள நிலையில் அல்லவா இருக்கிறான்; சாறு போய் விட்டது, சக்கைதானே மிச்சம்!!!

தன்னை மணம் செய்துகொண்டு, 'வாழ்வு' நடத்த முடியாத அளவுக்கு, நற்குணங்கள் யாவற்றினையும், நல்ல நினைப்பினைக்கூட நாசமாக்கிக் கொண்டுவிட்டவன், வேலப்பன். எனவே, இனி அவனை எதிர்ப்பார்ப்பதும் வீண்— அவனுக்காக ஏங்கித் தவிப்பதும் :அவசியமற்ற செயல். உள்ளத்தில் புகுந்து எதிர்காலம்பற்றி ஏதேதோ இன்பக்கனவுகளைக் கூறி நம்பிக்கை தந்துவந்த வேலப்பன், திரும்பி வரவேப் போவதில்லை. ஏமாற்றம், திகைப்பு துடிப்பு, வறுமை, ஏக்கம், பேராசை, சூது, மோசடி, காமக்களியாட்டம், எனும் பல காட்டு மிருகங்கள் அவனைத் தாக்கித் தாக்கி, பிய்த்துக் கடித்துமென்று தின்று, கீழே துப்பிவிட்டன. இனி அவன் யாருக்கும் பலன் இல்லை—அவன் இனி அவனாகவே இருக்க முடியாது!!

செல்லி, இனி எதற்காகவும் எதிர்பார்த்தும் காத்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. எது கிடைத்தாலும் சரி மூன்றாம் தாரம், நாலாம் தாரமாக இருந்தாலும் சரி மூட்டை சுமக்கும் கூலிக்காரனுக்கு மனைவியாக வேண்டிய தானாலும் சரி, தயாராகி விட்டாள். சமூகம் ஆண்—பெண் கூட்டுறவு ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டில் இருக்கவேண்டும். என்று கட்டளையிடுகிறது, அதை மீறுவானேன் என்ற

எண்ணத்தால், திருமணம் செய்துகொள்ள வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தாள் செல்லி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/41&oldid=1576369" இலிருந்து மீள்விக்கப்பட்டது