பக்கம்:புதிய பொலிவு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

கண்ணைத் திறக்கிறா, கலம் தண்ணி விடுகிறா! அவன் வானத்தைப் பார்க்கிறான், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுகிறான். அந்தக் குடும்பம் படுகிறபாடு, கல்நெஞ்சக்காரனையும் கதறவைத்து விடுமடாப்பா—என்று கிராமத்தார் பேசிக்கொண்டனர்.

ஓவிய நிபுணர் வடிவேலன், வழக்கப்படி பல கிராமீயக் காட்சிகளைத் தீட்டி வந்ததுபோலவே, அங்கும் வந்தான்—ஒரு மரத்தடியில், உட்கார்ந்து கொண்டு சற்றுத் தொலைவிலே ஆடுகள் மேய்ந்து கொண்டு இருப்பதை ஒப்புக்கு அவ்வப்போது கவனித்துக்கொண்டிருந்த செல்லியைக் கண்டான். அவனுடைய கருத்து மலர்ந்தது, கவர்ச்சிகரமான கிராமீயச் சூழ்நிலையில், கட்டழகுவாய்ந்த அந்தக் குமாரி, கவலைதோய்ந்த முகத்துடன் உட்கார்ந்துகொண்டிருந்த காட்சி, முதல்தரமாக அமைந்திருந்தது. உடனே எடுத்தான் திரையையும் தீட்டுக்கோலையும், ஓவியம் உருவெடுத்தது. ஓவியக் காரனுக்காகவே உட்கார்ந்திருப்பதுபோல செல்லியின் நிலைமை இருந்தது; அதைச் சாதகமாக்கிக்கொண்டு, வேகமாக மேல்வாரியான படம் தீட்டிவிட்டான்; இனி அதற்கு உயிரூட்டும் வகையில் வேலை செய்யவேண்டும்.

இரவு பகலென்று பாராமல், வேலைசெய்தான்—ஓவியம் மிக அருமையாக அமைந்துவிட்டது. நண்பர்கள் திறமையைப் பாராட்டினர்; அவனோ, உண்மை உருவத்தை எண்ணிப் பூரித்துக்கொண்டிருந்தான்.

மேகங்கள் அலைவதுகூட அப்படியே தெரிகிறது பார், என்று ஓவியத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவர் நிபுணர்கள்.

அவனோ, அந்தக் கண்களிலே கப்பிக்கொண்டிருக்கும் துக்கத்துக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருந்தான்—கவலையுடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/42&oldid=1576375" இலிருந்து மீள்விக்கப்பட்டது