பக்கம்:புதிய பொலிவு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பட்டணத்திலே அவனுக்குக் கோட்டைபோல வீடு இருக்கு, மோடார் கார் இருக்கு, இப்படிப்பட்ட இடம் கிடைச்சிருக்கு என் மகளுக்கு! அவளோட அழகுக்கும் குணத்துக்கும் இப்படிப்பட்ட அருமையான இடம்தான் வந்து வாய்க்கும். பாடுபட்டு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி என் மகளை நல்ல படியாக வளர்த்தேன்—அவ தங்கக்கட்டி குணத்திலே! அவளுக்கு இப்படிப்பட்ட இடம்தான் கிடைக்கும்!! என்று பேசிப் பேசி ஆனந்தப்படுவார், பலகாலமாக மனதை அரித்துக் கொண்டிருந்த துக்கம் தொலையும், கடைசி காலத்திலே கண்களிலே களிப்பு இருக்கும் என்று எண்ணித்தான் செல்லி, திருமணத்துக்கு, ஆர்வத்துடன் சம்மதமளித்தாள்.

செல்லி! செல்லி! செல்லி! என்று பல வகையான, ஆனால் அன்புச் சுருதி குறையாமல், ஓயாமல் கூப்பிடுவான் வடிவேலன். திருமணத்துக்குப் பிறகு, முன்னாலே அவன் கண்டதைவிட அதிகக் கவர்ச்சி அவளிடம் இருப்பதைக் கண்டான், களிப்புற்றான்.

அவன், எத்தனையோ முறை, தன் நண்பர்களிடம் வாதாடி இருக்கிறான், கிராமத்திலே இருக்கிற கவர்ச்சி இங்கே, நகரத்திலே கிடையாது, செடி கொடியிலே இருந்து, மாடு கன்றும் சரி, மக்களும் சரி, அங்கேதான் ஒருவிதமான இயற்கை எழிலுடனும் வளத்துடனும் இருக்க முடிகிறது, ‘டவுனில் எல்லாம் பூச்சுத்தான், எதிலும் இயற்கை எழில் தங்கி இருப்பதில்லை. பாரேன், வேடிக்கையை, தோட்டத்தில் மலர்ச் செடி வைத்து அழகைக் காணவேண்டும் என்று இல்லாமல், வீட்டின் கூடத்தில், மேடையின் பேரில் கண்ணாடிப் பாத்திரத்தில், காகிதப் பூங்கொத்தைச் செருகிவைத்து அழகுபார்க்கிற ரசிகர்கள்தானே நாமெல்லாம், நகரத்தில், அங்கே போய்ப் பாரடா, மலர்க் குவியலை—பச்சைப்பட்டின்மீது நவரத்தினங்களைத் தூவி இருப்பது போலிருக்கும்! மலர் தூவுவார்கள், ராஜ குமாரிகள் நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/45&oldid=1576387" இலிருந்து மீள்விக்கப்பட்டது