பக்கம்:புதிய பொலிவு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இருந்த காட்சிக்கும் வித்தியாசம் காணப்பட்டது. அதைக் கவனித்தறிய வடிவேலனால் முதலிலே முடியாமற் போனதற்குக் காரணம், அவன் அவளிடம் சொக்கிக் கிடந்ததுதான்! மடுவிலே இறங்கி, மகிழ்ச்சியுடன் நீந்தி விளையாடுவாள், கிராமத்தில்; வேறு பெண்களும் குளிக்க வருவார்கள்—விளையாட்டுப் பலமாகிவிடும், தண்ணீரை வாரி வாரி இறைத்துக்கொள்வார்கள். யார் முதலிலே வெளியே தலையைத் தூக்குகிறார்களோ அவர்களுக்கு மூணு குட்டு தலையிலே என்று பந்தயம் கட்டிக்கொண்டு, தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பார்கள் — உலர்ந்ததும் உலராததுமாகவே கூந்தலைக் கோதி முடிந்து கொள்வார்கள் — இவைகளாலே அவர்களிடம் உள்ளத்திலே ஒரு சுறுசுறுப்பும், உடலிலே ஒரு மினுமினுப்பும் ஏற்பட்டது—எழிலூட்டிற்று. இங்கே, வெந்நீர்! விதவிதமான சோப்புக் கட்டிகள்! பேசாமல் சிரிக்காமல், குளித்துவிட்டு, வரவேண்டும். குளிப்பது கிராமத்திலே, விளையாட்டிலே ஒன்று. இங்கு, கடமைகளில் ஒன்று! கிராமத்திலே, கண்களுக்கு விருந்தளிக்கப் பல காட்சிகள்—கிளி பழத்தைக் கொத்தித் தின்னும், காடை கௌதாரி கீழே சிதறிக் கிடக்கும் மணிகளைப் பொறுக்கித்தின்னும், வயலோரத்து நீரோடையில் வாத்துக்கள், பல இடங்களில் மரம்குத்திப் பறவைகள், மடுவிலே விதவிதமான மீன்கள், பட்டுப்பூச்சிகள் எங்கு பார்த்தாலும் வர்ணத்தை அள்ளித் தெளித்ததுபோல, ஆட்டுக் குட்டிகள் துள்ளுவதும், கயிறு அறுத்துக்கொண்டு ஓடிவரும் காளையைப் பிடிக்க உழவர்கள் கூச்சலிடுவதும், பெண்கள் பயந்து ஒதுங்குவதும், இப்படிப் பல காட்சிகள் கண்டு அதனாலே உள்ளத்துக்கு உற்சாகம் கிடைத்தபடி இருந்தது. முயற்சி— வெற்றி—இந்த இரு கட்டங்கள் தானே, மனித உள்ளத்துக்கு எழிலும் உரமும் தருவன; அந்த நிலை கிராமத்திலே விநாடிக்கு விநாடி ஏற்பட்டு வந்தது. ஒவ்வொரு காரியமும் வெற்றி அளிக்கும்போது களிப்பூட்டும். இங்கு, கடிகாரத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/49&oldid=1576406" இலிருந்து மீள்விக்கப்பட்டது