பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

பத்தே பத்துத் தூற்றல் தான். பின்னர் புழுதியைக் கிளறிய காற்று விசிற மழை ஓடி நகர்ந்து விட்டது. கரிய வானம் பிளந்து கொண்டு கோடை மின்னல் கீற்று தேடிற்று, கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடை மின்கீற்று என்னைத் தொட்டிருக்கும்; உலகை அழித்திருக்கும். தினசரிச் செய்திகள் கற்றிருக்கும்; தூற்றல் இன்பம் மரத்திருக்கும்; புழுக்கம் வெளி நிறைந்திருக்கும்; புழுதி எழுந்து படர்ந்திருக்கும்; உலகம் ஒழிந்திருக்கும். நான் தனியிருந்து என்ன செய்வதென்று கைநீட்டா திருந்தேன்."

இப்படி சொந்தமாகவும், ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தழுவியும் க. நா. சு. அஞ்சாறு கவிதைகள் எழுதினர். பிறகு, புதுக்கவிதை சம்பந்தமான தனது கருத்துக்களை விளக்கும் கட்டுரை ஒன்றை எழுதினர். அது சரஸ்வதி 1959 ஆண்டு மலரில் பிரசுரமாயிற்று.

அவர் கூறியுள்ள கருத்துக்கள் கவனிப்புக்கு உரியவை-

‘எளிய பதங்கள், எளிய சந்தம்’ என்றும், ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ என்றும் சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் சுப்ரமண்ய பாரதியார் புதுக் கவிதைக்குரிய லட்சணங்களை எடுத்துச் சொன்னார். எளிமை, தெளிவு என்கிற இரண்டு லட்சணங்களையும் பின்பற்றிப் பின்னர் கவிகள் சிலர் எழுதினார்கள்.. ... .

பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும், மேலாக ஒரு வேகம் இருந்தது. இந்த வேகம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும்போதுதான் உயர் கவிதை எப்படித் தோன்றுகிறது என்பது தெரியவரும். உள்ளத்தில் உள்ள உண்மை ஒலி வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதொரு வேகம் இது. எப்படி வந்தது என்பதுதான் கலை ரகசியம். எப்படியோ வந்தது - பாரதியார் உயர்ந்த கவியானார். இந்தக் கவிதை