பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அறிமுகம் செய்து கொண்டிருக்கக் கூடும். புல்லையும் மண்ணையும் நீரையும் மனிதர்களையும் நாடுகளையும் உற்சாகத்தோடு பாடிப் பெருமைப்பட்ட விட்மனைப் போல பாரதியும் காற்றையும் கயிற்றையும் மணலையும் விண்ணின் அற்புதங்களையும் மண்ணின் மாண்புகளையும் போற்றி, பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கி’ தர்க்கித்துக் கொண்டு போக விரும்பியிருக்கலாம். பாரதத்தின் பழங்கால ரிஷிகளைப் போல ‘உபநிஷத் கர்த்தாக்களைப் போல--பாரதியும் ஒளியை, வெம்மையை, சக்தியை, காற்றை, கடலை, ஜகத்தினைப் போற்றிப் புகழ இப்புதிய வடிவத்தைக் கையாண்டிருக்கலாம்.

அது எவ்வாறாயினும், தமிழுக்குப் புதிய வடிவம் ஒன்று கிடைத்தது.

பாரதியின் வசனகவிதை இனிமை, எளிமை, கவிதை மெருகு, ஒட்டம் எல்லாம் பெற்றுத் திகழ்கிறது. இதற்கு ஒரு உதாரணமாகப் பின்வருவதைக் குறிப்பிடலாம்.

"நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்,
வெம்மைத் தெய்வமே, ஞாயிறே. ஒளிக்குன்றே
அமுதமாகிய உயிரின் உலகமாகிய
உடலிலே மீன்களாகத் தோன்றும்
விழிகளின் நாயகமே,
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
சிவனென்னும் வேடன் சக்தியென்னும்
குறத்தி உலகமென்னும் புனங்காக்கச்
சொல்லி வைத்து விட்டுப் போன விளக்கே,
கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும்
தன் முகத்தை மூடி வைத்திருக்கும்
ஒளியென்னும் திரையே,
ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்.”

(ஞாயிறு புகழ்)

இது வெறும் வசனம் தானா? இல்லை, இது கவிதைதான் என்று எப்படிச் சொல்ல முடியும்?