பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதை ரசித்ததை உடனே வெளிச் சொல்பவர் அவர். படைப்பாளி, இலக்கியரசிகன் என்பதோடு அவர் ஒரு இலக்கிய தகவல்களஞ்சியம். இந்த நாற்பதைம்பது வருஷ இலக்கிய உலகத் தகவல்களோ, போக்குகளோ, புள்ளி விவரமோ, புத்தக பட்டியலோ, அவற்றின் உள்ளடக்கமோ, அவரிடம் கேட்டால் ரெடிமேடாக கிடைக்கும். தவிர வெளியே எங்கும் கிடைக்காத தற்கால இலக்கிய நூல்களும் பத்திரிகைகளும் அவரிடம் கிடைக்கும். செல்லப்பாவிடம் கேட்டால் கிடைக்கும் என்று தகவல் கொடுக்கப்பட்டு என்னிடம் தகவல்கள் கேட்க வருபவர்களிடம் வல்லிக்கண்ணனிடம் தான் போக வேண்டும் என்பேன் நான். அவர் தேடித்தந்திராவிட்டால் பிச்சமூர்த்தி கவிதைகள் சில கிடைத்து இராது.

இதையெல்லாம் சொல்லக் காரணம் இந்த புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூலே எழுத அவருக்கு உள்ள தகுதியை தெரியப்படுத்தத் தான். இந்த புத்தகத்தை அவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு முறையாக எழுதி இருக்க முடியாது நிச்சயமாய். தற்கால புதுக்கவிதை இயக்கத்தோடு வளர்ந்திருந்த எனக்கே வியப்பு, இந்த கட்டுரை தொடரை நான் ‘தீபம்’ பத்திரிகையில் படித்து வந்தபோது, எனக்குத் தெரியவராத பல தகவல்கள், கட்டுரை விஷயங்கள், சில கருத்துக்கள் எனக்கு முதன்முலாக தெரிய வந்தன. தீபம் பத்திரிகை ஆசிரியர் நா. பார்த்தசாரதிக்கு என் நன்றியை தெரிவித்தாகவேண்டும் இந்த இடத்தில். இலக்கிய உபயோகமான காரியமாக, அவர் தன் பத்திரிகையில் பி. எஸ், ராமையாவை ‘மணிக்கொடி காலம்’ எழுதச் செய்து விட்டு பிறகு வல்லிக்கண்ணனே சரஸ்வதி காலம் எழுதவும் பயன்படுத்தி தொடர்ந்து வல்லிக்கண்ணனை புதுக்கவிதை பற்றிய வரலாற்று நூலே எழுத வைத்தது ஒரு முக்கிய நிகழ்ச்சி. அவருக்கு இந்த யோசனையும் அக்கறையும் தோன்றி இராவிட்டால் இந்த நூல் பிறந்தே இருக்காது. வேறு யார், எந்த பத்திரிகை இதை செய்திருக்கக் கூடும்?

இந்த நூலைப் பற்றி நான் இன்னும் பேசவில்லை. பேசப் போவதும் இல்லை. இதன் பக்கங்களே வாசகர்களுடன் பேசும். இது எனக்கு மன நிறைவு தந்த நூல். ஒரு இலக்கிய-