பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

நா. வானமாமலை

நமது குழப்பமான ‘அவனவன் சுருட்டினது அவனவன் உடைமை’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் நமது முதலாளித்துவ அமைப்பில் குரங்கு கைப்பட்ட உபயோகப் பொருள்கள் போலச் சமுதாயம் சீரழிய, உபயோகமற்ற தங்கரளிப்பூக்கள் மட்டும் தேன் குடிக்க எதிர்பார்க்கும். பயனெதுவுமற்ற கண்னை மயக்குகிற தங்கரளிப்பூக்கள் போன்ற பிரிவினர் தேன் குடிக்கக் காத்திருக்கிறார்கள். இதில் satire இருக்கிறது. கோபம்கூட நமக்கு வரவில்லை. சமுதாயமே கேலிக் கூத்தாகக் காட்டப்படுகிறது.

‘விமர்சனம்-விமர்சகன்’ என்றொரு கவிதை;

வேலைக்காரியைக் குறை
சொல்லி
மாமியார் அவல் இடிக்க
உமி ஊதி ருசி பார்த்து
ருசி பார்க்க உமி ஊதி
எஞ்சியது
உரலும் உலக்கையுமே.

இது படைப்பாளியை எடுத்ததற்கெல்லாம் குறைகூறும் தமிழக இலக்கியத் தலையாரிகளைப் பற்றிய கவிதை. நல்ல அங்கதம். இங்கு satire சரியாகவே விமர்சகளைத் தாக்குகிறது.

உமி ஊதி ருசி பார்த்து
ருசி பார்க்க உமி ஊதி

என்ற வரிகள் தான்தோன்றி விமர்சகர்களின் விமர்சனத் தன்மையை அங்கதப் பான்மையோடு ஒரு வாக்கியத்திலுள்ள சொற்கோப்பைச் சிறிதே மாற்றி, இலக்கியப் படைப்பு முழுவதையுமே ஊதித்தள்ளி விடுவதை எரிச்சலுடன் எழுதுகிறார் கவிஞர்.

‘காலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடும்’ என்ற நம்பிக்கையைச் சமூகத்தின் வாட்டி வதைக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு உபதேசமாய், ‘பூக்கள்’ என்ற கவிதையில் கூறுகிறார் ஒரு கவிஞர்:

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது
சத்தமே போடாமல் கண்களை மூடிக்கொண்டு
கொஞ்சம் பொறுமையாய் இருந்தோமானால்
காலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடும்