பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதை-பழமையும் புதுமையும்

101


எங்கெங்கும் ஒளிப்பூச்சு
செங்கதிர்கள் பரவலாச்சு.

16

எந்தத் துலாபாரத்திலும்

எனது தட்டே தாழ்கிறது.

பலவகைப் படிமங்கள் முதல் 14 கவிதைகளில் சமூகச் சீரழிவைக் காட்டுகின்றன. முடிவில் நம்பிக்கையொளி சுடர்விடுகிறது. கடைசி வரிகள் ‘மனிதனைப் போலொரு வல்லமையுள்ள சக்தியில்லை’ என்ற கார்க்கியின் வாசகத்தை ஒத்திருக்கின்றன. இங்கே மனித சக்தி செயல்பட்டு வெள்ளம்போல் பாய்ந்து பழைய சமூகக் குப்பைகளை அடித்துச் செல்லும் என்று கவிஞர் சொல்லவில்லை.

‘முடிவுகள்’ என்ற இன்னொரு கவிதையில் மனித முயற்சியின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது:

எதிர்பார்த்த வசந்தத்தின்
வாசலில் நின்று
கதவுகளைத்தட்டு—
திறக்கப்படாவிடில்
உடைத்தெறிந்து
உள்ளே செல்.

இலையுதிர் காலத்தில் மரத்தடியில் அமர்ந்து கீழே விழும் இலைகளை எண்ணிக் கொண்டிருந்தால் வசந்தம் வந்து விடுமோ? பழமையில் மூழ்கி செயலற்றிருக்கும் சமூகப் பிரிவுகளை இவ்வரிகள் குறிப்பிடுகின்றன (இது மேற்கோள் காட்டப்பட்ட பகுதிக்கு முந்தியது). வசந்தம், மக்களது நல்வாழ்வைக் காட்டும் குறியீடு. நல்வாழ்வுக்காகத் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற முதுமொழிக்கு எதிர்ப்பாகத் ‘தட்டு, திறக்காவிட்டால் உடைத்தெறிந்து உள்ளே செல்!’ என்று கவிஞர் மனித முயற்சித் தேவையைச் சுட்டிக் காட்டுகிறார். தனி ஆர்வங்கள், கூட்டு ஆர்வமாக ஒன்று கூடும்போது சூறாவளிக்குரிய பெருவலிமை பெறுகிறது. திறக்காதகதவும் திறக்கப்படும். இதனை வெளிப்படையாகவே சொல்லுகிற கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் தொகுப்புகளாகவும் வெளியாகியுள்ளன. பாரதி விழா போன்ற விழா நாட்களில் புரட்சிகரமான ஜனநாயகக் கவிதைப் பாதைக்குப் பலவிதத் தத்துவப் போக்குடையவர்கள் வருகிறார்கள். பாரதி ஒளியில் இவர்களுடைய