பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதை-பழமையும் புதுமையும்

103

கவிதையனைத்தையும் மனிதனது நல்வாழ்வுப் போராட்டத்திற்கும் நல்வாழ்வு நிருமானத்திற்கும் பயன்படுத்துவோமாக.

அவனது உறுதியைக் குலைக்கும், வேகத்தைத் தடுக்கும், கொள்கைப் பிடியைத் தளர்த்தும் கூக்குரல்களின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துவோம்.

கவிதையனைத்திற்கும் நாயகன் மனிதன். சமூகத்தில் வாழ்ந்துகொண்டே அதனை மாற்றிக்கொண்டிருக்கும் மனிதன், உலக முழுவதையும் தலைகீழாகப் புரட்டும் வல்லமையுடையவன். உலகின் பல பகுதிகளில் தனது தகுதிக்கேற்றதாக இல்லாத அற்பமான சமுதாய அமைப்புகளை உடைத்தெறிந்து, மனித கெளரவத்திற்கேற்ற நல்லமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். உலக சோசலிஸ்டு அணி உருவாகி வளர்ந்து வருகிறது. இதுவே உழைக்கும் மக்களுக்கு ஒளிபரப்பும் சூரியன். மக்களின் நல்லார்வங்கள் வளரப் பாடுவோம் நாம்.

மக்களுக்குத் தீமையையே பரப்பும் இச்சமுதாய அமைப்பை வேரோடு சாய்ப்போம். சாய்க்கும்போதே புதிய சமுதாயத்தின் அடிப்படைகளை அமைப்போம்.

உலக முழுவதும் மக்களிடையே நேசம் பரவவும், உலக மகாகவிகளின் கனவான எல்லோரும் எல்லா இன்பமும் பெற்று வாழும் நிலை தோன்றவும், இக்குறிக்கோளுக்காகப் போராடுகிற போர்ப்படைக்கு ஊக்கமளிக்கவும் நாம் நமது கவிதையை இசைப்போம்.

இதனைப் பிரச்சாரம் என்பவர்களைப் பார்த்து, மக்களது இன்ப வாழ்க்கைக்குப் பிரச்சாரம் செய்வது பெருமைப்படத் தக்கதோர் செயல் என்று மனத்துள் நினைத்து ஏளனப் புன்னகை புரிவோம்.

அனைத்து மக்களின் நல்வாழ்க்கை, நற்பண்பாடு, நற்கலைகள் எல்லாம் வளர்க்கக் கவிதையை வளர்ப்போம்.

நமக்குத் தொழில் கவிதை
காட்டுக் குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்.