பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் படைப்பின் பின்னணி

ஃபிராய்டிசம், சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம்
முதலிய கொள்கைகள்

ஃபிராய்டிசம், நரம்பு நோய் வியாதிகளுக்கும் சித்தங்களுக்கும் ஆய்வு முறையாகவும் சிகிச்சை முறையாகவும் தொடங்கியது. பிற்காலத்தில் அது உலகக் கண்ணோட்டமாகவே மாற்றப்பட்டுவிட்டது. முதலாளித்துவ உலகில் கலை இலக்கியம், சமூகவியல், வரலாறு, மானிடவியல் முதலிய துறைகளனைத்திலும் இக்கொள்கை செல்வாக்குப் பெற்றுள்ளது. மேனாட்டு அறிஞர்களைப் பின்பற்றும் தமிழ்நாட்டுக் கலை இலக்கியவாதிகளும் இக்கொள்கையின் அடிப்படையில் கலையையும் இலக்கியத்தையும் படைத்து வருகிறார்கள். இலக்கிய விமரிசனங்களும் செய்து வருகிறார்கள். ஃபிராய்டிசத்தின் தோற்றம், வளர்ச்சி, அதனடிப்படையில் எழுந்த கலை இலக்கியக் கொள்கைகளின் சமூக வர்க்கத்தன்மை ஆகியவற்றைச் சுருக்கமாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஃபிராய்டிசம் என்பது ஓர் உளவியல் கொள்கை, இதனையே சில மேனாட்டு ஆசிரியர்கள் உலகக் கண்ணோட்டமாகக் காண்கிறார்கள். இக்கொள்கையின் முதலாசிரியர் ஸிக்மண்ட் ஃபிராய்டு. இவர் நரம்பு நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணராக விளங்கினார். சித்தப்பிரமை, மூளைக் கோளாறு, உறக்கமின்மை, ஹிஸ்டீரியா போன்ற மன நோய் உடையவர்களைப் பரிசோதித்து அவற்றிற்குக் காரணம் எவை என்பது குறித்து ஒரு பொதுக் கொள்கையை இவர் உருவாக்கினார். இக்கொள்கையில் மனித நடத்தையின் மூல காரணம் எது என்பதையும் மனித நடத்தையை ஆராய்ந்து அறிய வழிமுறைகள் எவை என்பனவற்றையும் அவர் விளக்கினார்.

ஃபிராய்டு தமது கொள்கையை உருவாக்க உடலுறுப்புகளின் செயலால், உள்ள நிகழ்ச்சிகளை விளக்கும் விஞ்ஞான முறையைக் கைவிட்டு அகவயமுறை ஆராய்ச்சிகளைக் கையாண்டார். அம்முறையில் மனித நடத்தைக்குரிய காரணங்களை ஆராய்ந்தார். இவ்வாறாக ஓர் அகவயமான ஆய்வு முறையையும் அதன் அடிப்படையில் அகவயமான பொதுக்

7/2