பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியப் படைப்பின் பின்னணி

11


தமது கொள்கையின்படி ஃபிராய்ட் இவனது செய்கையை விளக்குகிறார். பச்சை, கருப்புக்கும் இவனது பதற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று ஃபிராய்டு கருதி பல கேள்விகள் கேட்டு இவனது நடத்தைக்குக் காரணம் கண்டுபிடித்தார். கருப்பு நிறமான செருப்பும் பச்சை நிறமான உடையும் அணிந்த ஒருத்தியைப் பார்த்து அவன் ஆசை கொண்டான். அவளைப் பின் தொடர்ந்தான். அவள் வீடு சென்றதும் மணமானவள் என்று அறிந்துகொண்டான். ஆசை நிறைவேறச் சமூகம் தடைபோட்டது. உணர்வு நிலையில் அதனை ஒப்புக்கொண்டான். ஆனால் தடைப்பட்ட இவ்வாசை உணர்வு மட்டத்திற்குக் கீழே சென்று (Sub Conscious) அதன் பகுதியாகிவிடுகிறது. இப்பொழுது வெளிவரும் வாய்ப்பு நோக்கி அங்கேயே பதுங்கியிருக்கிறது. பச்சையும் கருப்பும் சேர்ந்த பொருள்களைக் காணும்போதெல்லாம் உணர்ச்சி வெளிப்படுகிறது. ஆனால் அவனது உணர்விற்கு இதன் காரணம் தெரியவில்லை. அடிக்கடி ‘பச்சை கருப்பு’ நிறக் கூட்டின்மீது ஆசையும், ஆனால் தடை செய்தால், “வேண்டாம் வேண்டாம்” என்ற எதிர்ப்புணர்ச்சியும் தோன்றுகின்றன.

இவ்வாறு காரணமறியாமல் நாம் செயல் புரிவது போலவே, கனவிலும் காரணமறியாமல் பல நிகழ்ச்சிகளைக் காணலாம். இதற்குக் காரணம் விழித்திருக்கும் நிலையில் ஆழ் உணர்விலிருந்து அடக்கப்பட்ட உணர்ச்சி வெளியாவது போலவே, உறக்க நிலையில் கனவில் வெளிப்படலாம். உதாரணமாக மேற்கூறிய மனிதன் பச்சைக் கொடியிலுள்ள கருப்புத் திராட்சைப்பழம் தன் வாயில் விழுவது போலக் கனவு கண்டான்.

‘இட்’ உணர்ச்சி ஒரு இடையறாத வெள்ளம். அது தடைப்படுவதுதான் ‘ஆழ் உணர்வு’ ஏற்படக் காரணம். ஆழ் உணர்வுக்கும் உணர்வுக்கும் இடையில் ஒரு தடை அதிகாரி போன்ற உணர்வு இருக்கிறது. இது தடை செய்வதால்தான் தடைப்பட்ட உணர்ச்சிகள் உணர்வு நிலைக்கு வருவதில்லை. அது சற்றே ஓய்ந்திருக்கும்பொழுது, அடக்கப்பட்ட உணர்ச்சி வெளியாகிறது.

அடக்கப்பட்ட உணர்ச்சிக்கும் உணர்வு நிலைக்குமுள்ள முரண்பாட்டிற்குச் ‘சிக்கல்’ (Complex) என்று பெயர். அவற்றைப் பலவகைகளாக ஃபிராய்டு பிரித்துக் கூறுகிறார். அவற்றுள் சில:

நார்ஸிலஸ் சிக்கல்: தன்னைத் தானே மிதமிஞ்சி நேசிக்கும் சிக்கல். இது அடக்கப்பட்ட ஆசையால் வருவது.