பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் படைப்பின் பின்னணி

15

களும் அதனுள் அடங்குமெனவும் கூறுவர். இவர்கள் ஆய்வு முறையிலும் அதீதக் கற்பனைகளை நீக்கி மட்டுப்படுத்தினர்.

ஆயினும், சமூக நிகழ்ச்சிகளுக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் Sub conscious தான் காரணம் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்வர்.

நரம்புமண்டல ஆராய்ச்சி, உள நோய் சிகிச்சை என்ற துறைகளிலிருந்து தோன்றிய இக்கொள்கை தனது பிறப்பிடத்திலேயே தோற்றுப்போய் விட்டது; உடலியல் இயக்க விதிகளின்படியே நரம்புமண்டலம், சிறுமூளை இவற்றின் செயல் முறையை ஆராய்ந்து மன இயக்கத்தின் நிகழ்ச்சிகளை இவான் பாவ்லாவும் அவரது சீடர்களும் விளக்கினர். எனவே, உள்ள நிகழ்ச்சிகளைக் கற்பனைக் கதைகள் கொண்டு விளக்கவேண்டிய அவசியம் இன்றில்லை. இயற்கை விஞ்ஞானச் சோதனை முறைகளாலும், அனுமானம், பொதுமைப்படுத்தி விதிகளை வகுத்தல் முதலிய விஞ்ஞான வழிகளாலும் இவற்றை அறியலாம்.

ஆயினும் கலையிலும் இலக்கியத்திலும் இதன் செல்வாக்கு பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, மேற்கு ஜெர்மனி முதலிய நாடுகளில் பெரிதும் காணப்படுகிறது.

இக்கொள்கையின் அடிப்படையில்தான் சர்ரியலிசம் எக்சிஸ்டென்ஷியலிசம் என்ற கலை-இலக்கியக்கொள்கைகள் தோன்றின. இவற்றின் தத்துவ அடிப்படைகள் ‘கான்டி’ன் உலகக் கண்ணோட்டமாகும்.

சர்ரியலிசம் முதல் உலகப் போருக்குப் பின் பிரான்ஸில் தோன்றியது. போருக்குப் பின் முதிர்ந்துவிட்ட முதலாளித்துவ முரண்பாடுகளின் விளைவான கருத்துக்களே இக்கொள்கையின் அடிப்படை. அதன் தத்துவ அடிப்படைகள் ஃபிராய்டின் அகவயக் கொள்கையின் மீது அமைந்தவை. ஃபிராய்டிச வாதிகள் இணைவிழைச்சு உணர்ச்சியின் படைப்பும் விளைவும் தான் கலையும் இலக்கியமும் என்று கருதுகின்றனர். சர்ரியலிசம் இதன் அடிப்படையில்தான் இணைவிழைச்சுத் துடிப்புகளும் (Sexual impulses) வாழ்க்கை அச்சமும் இறப்பு அச்சமும் தான் கலையின் உள்ளடக்கமாக இருத்தல்வேண்டுமெனக் கூறுகிறது.

போருக்குப் பின் முதிர்ச்சியடைந்த முதலாளித்துவ முரண்பாடுகள் சமுதாயத்தை வறண்ட பாலைவனமாக்கிவிடும்; அதனை மனிதனால் தடுக்க முடியாதென்ற சோக ஓலம் சர்ரியலிஸ்டுகள் படைப்புகளில் காணப்படுகின்றன. சிலர் வாழ்க்கையின்மீது அருவருப்பும் அச்சமும் ஏற்படும்படி வாழ்க்கையைக் கோரமாகச் சித்தரித்துக்காட்டி, மனிதனது வாழ்க்கைப்பற்றை