பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நா. வானமாமலை

முடியாத இரண்டுங்கெட்டான் வர்க்கத்தின் நெரிந்து சாகும் உள்ளத்தின் உணர்ச்சி அது. முதல் உலகப் போருக்குப் பின் உடைமை வர்க்கமும் உழைப்பாளி வர்க்கமும் எதிர்எதிராக அணிவகுத்துப் போராடும் வர்க்கப்போரின் உக்கிரத்தைக் இண்டு பயந்த நடுத்தர வர்க்கம் இரண்டிலும் சேராமல் ஒதுங்கி சமூகப் போராட்டத்திற்கு வெளியே தங்கள் தனிமனிதச் சுதந்திரப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தது. இவ்வர்க்கத்தின் பிரதிநிதிகளான கவிஞர்கள், தங்கள் இலக்கியத்திற்கான கருக்களைச் சமுதாயத்திற்கு வெளியே தேடிக்கொண்டிருந்தார்கள். தங்கள் உள்ளத்திற்குள்ளேயே உண்மைகளையெல்லாம் தேடிப்பிடிக்க முயன்றார்கள். உலகின் இன்ப வாழ்வைப் பறிப்போரை எதிர்த்துப் போராடும் அணியில் சேர அவர்கள் ‘தனி மனிதம்’ இடந்தரவில்லை. எனவே உலகம் அழியும், மனிதனும் அழிவான் என்று எண்ணினார்கள். இதனால்தான் நம்பிக்கை வறட்சியும் சோக ஓலங்களும் அவர்களுடைய படைப்புகளில் காணப்பட்டன. டி.எஸ். எலியட், இத்தகையோருள் முக்கியமானவர். அவரைப் பின்பற்றும் நமது புதுக்கவிஞர்கள் இங்கும் நமது மக்களுக்கு வருங்காலத்தில் நல்வாழ்வு உண்டென நம்பவில்லை. இவர்களும் மக்களது நல்வாழ்வுப் போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். இவர்கள் மக்கள் கூட்டத்தை மந்தையென்று கருதுகிறார்கள். “அணி வகுத்துச் செல்லும் கட்டெறும்புக் கூட்டம் தன்னை எதிர்ப் போரைக் குதறிவிட்டு தானும் சாகும்” என்ற கவிதை வரிகளில் நாம் அணிவகுத்து நிற்கும் மக்களைக் காணலாம். உலக சமாதானத்திற்கோ, நாட்டு விடுதலைக்கோ, நாட்டுப் பாதுகாப்புக்கோ, நல்வாழ்விற்கோ போராடும் மக்கள் கூட்டமெல்லாம் கட்டெறும்புக் கூட்டம்தான்!

தங்களுடைய நம்பிக்கை வறட்சியைப் பல உருவங்களில் இவர்கள் வெளியிடுவார்கள். பெ.கோ. சுந்தரராஜன் எழுதுகிறார்:

வளரும் நொடியினிலே
வாழ்வே சிதைந்துவிடும்
வையம் உருக்குலையும்
வரையறையும் கண்டுவிட்டேன்
இப்பொழுது நினைக்கின்றேன்
இருந்ததை மறந்திட்டேன்

வேறொரு கவிதையில் அவர் எழுதுகிறார்: