பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்
முற்போக்கும் பிற்போக்கும்

புதுக்கவிதையின் தொடக்கக் கால உள்ளடக்கம் பற்றி, சி. சு. செல்லப்பாவின் ‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பை ஆதாரமாகக் கொண்டு முன்னைய கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அக்காலப் புதுக்கவிஞர்களது உள்ளடக்கத்தின் அடிப்படை தனிமனிதம். அதுவும் சமுதாயத்தின் நடுத்தட்டுகளில் வாழ்ந்து வாழ்க்கையை மேலும் கீழும் பார்க்கிறவர்கள் மனத்தில் உருவான தனிமனிதம். மேலே சமுதாய உற்பத்தியின் மன்னர்கள்; கீழே சமுதாய உற்பத்தியின் படைப்பாளிகள். இரு வர்க்கங்களுக்கும் இடையே முரண்பாடுகள் முதிர்ந்து, தீர்மானமான போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில் பொருளாதார, அரசியல் போராட்டங்களுக்கு வழிகாட்டியாகத் தத்துவப் போராட்டங்களும் கூர்மையாகியுள்ள காலத்தில் நடுத்தர வர்க்கத்தின் அறிவாளிகள், இரண்டு பக்கமும் பார்த்துத் திகைப்படைகிறார்கள்.

அவர்களில் சமூக வாழ்க்கையின் இயக்கப் போக்கை அறிந்துகொள்ளுகிறவர்கள் தமது அணியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சமுதாயப் போராட்டத்தில், தமது நலன்களை, உழைக்கும் மக்கள் நலன்களோடு இணைத்துக்கொண்டு, ஒன்றிவிடுகிறார்கள். சமுதாய உற்பத்தி மன்னர்களின் தத்துவச் சிந்தனைகளில் மனம் பறிகொடுத்த நடுவாந்தர அறிவாளிகள், உற்பத்திச் சாதன உடைமையாளர்களுக்கும் தனி உடைமை உற்பத்தி முறைக்கும் இக்காலத்தில் தோன்றியுள்ள ஆபத்தைத் தமக்கு வந்த ஆபத்தாகக் கருதுகிறார்கள். இது வரை உற்பத்தி மன்னர்களின் ஆஸ்தான கவிகளாகவும், அவர்களது தத்துவ ஒலிபெருக்கிகளாகவும் இருந்து, தாங்களே, அவர்கள் என்றெண்ணி மயங்கி, சுதந்திரத்தை அனுபவிப்பதாக எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு, உலக ரீதியான வர்க்கப் போராட்டங்களின் கடுமையையும், அதில் பாட்டாளிகள் பெற்றுவரும் வெற்றிகளையும், உடைமை மன்னர்களுக்கும் உடைமை முறைக்கும் வந்துள்ள போராட்டத்தையும் கண்டு, அது தங்களுக்கே வந்துள்ளதெனக் கருதி மயங்குகிறார்கள். புற