பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

நா. வானமாமலை

காத்திருப்ப தெல்லாம்—உன்
இறுதி ஆயுதப் பிரயோகத்திற்குத்தான்
நான் மெல்லச் சிரித்தது
உனக்குத் துணிச்சல் மூட்டியது
நீ என்னை முதல் முறை முத்தமிட்டபோது
நான் தயங்கினேன், உறுதியற்று
இருந்தேன், ஆர்வம் காட்ட
அச்சமுற்றேன், சிறகுகள்
விரித்த பரவசம் உற்றேன்.
இன்று நம் வாழ்க்கை புளித்துவிட்டது
நாம் வேறான உலகங்களில்
வார்க்கப்பட்டதாய் உணர்கிறோம்.
சென்றதை நினைக்கையில்

ஏக்கமே மிஞ்சும்.

வாழ்க்கைப் போராட்டத்தின் பலமுனைப் போர்கள், இப்பொழுது ஒருமுனை நோக்கிக் குவிகின்றன. புற உலகில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

அகவய உலகின் பிம்பங்கள் கலைகின்றன. இப்பொழுது அக உலகில் வாழ்வது கடினமாகிவிட்டது. உலகையும் சமுதாய அமைப்புகளையும் சுதந்திரத்தை நசுக்கும் ஆளும் வர்க்கத்தின் இயந்திரங்களையும், நடுத்தர வர்க்க அறிவாளிகள் காண்கின்றனர். அவர்களில் சில பகுதியினர் தங்கள் பொருளாதார நலன்களுக்காகப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். தனி உணர்வு, சங்க உணர்வாக, தொழில் பகுதி உணர்வாக வளர்ச்சி பெறுகிறது. ஆயினும் இன்றும் அவர்கள், உலகை மாற்றுகிற உழைப்பாளி வர்க்கச் சக்திகளோடு இணைந்து சமுதாய மாற்றப் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. அதனால் தங்களை நசுக்கும், தங்களுக்குச் சுதந்திரத்தை மறுக்கும் ஆளும் வர்க்கத்தையும் அதன் அமைப்புகளையும் அவர்களது போலித்தனமான சுதந்திரச் சோசலிசத் தத்துவங்களையும் சாடுகிறார்கள். இவர்கள் இப்பொழுது அகவய உலகிலிருந்து, நடப்பியல் புற உலகில் நுழைகிறார்கள். புற உலகத்தில் சுதந்திரத்தை ஒடுக்கும் சக்திகளைக் காண்கிறார்கள். இவர்களது கவிதைகள், சமுதாய விமர்சனமாக, ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக ஒலிக்கின்றன. சில சமயம் கேலியும் கிண்டலு மாக, அமைப்புகளையும் போக்குகளையும் இவர்கள் பழித்துப் பாடுகிறார்கள். இக்கவிதைகளில் சமுதாய உணர்வும் ஆதிக்க எதிர்ப்பும் போலித்தன்மை எதிர்ப்பும் காணப்-