பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

109


112. புகலும் புகழும்

தோன்றிற் புகழோடு தோன்றுக. புகழ் எனின் உயிரையும் கொடுக்குவர் என்றெல்லாம் புகழுக்கு ஏகப்பட்ட மரியாதை உண்டு.

நல்லதைச் செய்து புகழ் பெறுவதைவிட, அல்லதைச் செய்து, அனைவரையும் குலை நடுங்கச் செய்து, புகழ் பெறுவதுதான் இன்றைய ‘பாஷன்’ ஆகியிருக்கிறது.

பிறரை மகிழ் வித்துப் பெறுகிற புகழ் நிலைத்து நிற்கும். பிறரை அழித்து வாங்குகிற புகழ் - நாற்றத்தை சுமந்து வரும் காற்றை சுவாசிப்பது போல்தான்.

புகழ் என்றால் அருஞ் செயல். அந்த அரிய செயலால் பெறுகிற வெற்றி. அந்த வெற்றியால் விளைகிற மேன்மை. அந்த மேன்மை வழங்குகிற கீர்த்தி. அந்த கீர்த்தி கொடுக்கிற வாழ்க்கை மேம்பாடு. இப்படியெல்லாம் புகழுக்கு அடித்தளம் உண்டு. அர்த்தம் உண்டு.

இந்தப் புகழ் எங்கே போகிறது? எங்கே போய் தங்குகிறது? புகலில்தான். ஆமாம், புகல் என்றாலே உடல் என்று ஓர் அர்த்தம்.

புகழ் புகும் இடம், செய்பவரின் உடல்தான். ஆமாம்... புகல் என்றாலே உடல் என்றுதான் பொருள். அந்தப் புகழ் போய் கொண்டாடும் இடமும் உடம்புதான். உடலுக்குள் புகழ் சரண் அடைவது. பற்றுடன் பிரவேசிப்பது, வுருப்பத்துடன் தஞ்சம் அடைவது, என்பதற்கெல்லாம் புகல் என்றே அர்த்தம்.