பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

137


மூன்று வேளையும் தின்று கிடப்பதால், கொழுப்பதால் உடலுக்கு நோய்கள் சூழ்ந்து கொள்கின்றன. அதனால் பெருந்தீனி தின்பவன், பல நோய்க்கு ஆளாகிறான் என்று அவனை ரோகி என்றனர்.

அதற்கும் மேலே இரவு பகல் பாராமல் தின்னகதியாய் இருப்பவர்களை என்ன சொல்ல. அவர்கள் மனதுக்கும், உடலுக்கும், நலத்திற்கும், சுகத்திற்கும் துரோகிகள் என்று சொல்லலாமா?

வறுமையினால் வயிற்றுக்குச் சோறே தர முடியாமல் தவிக்கிறானே அவன் யோகி அல்ல, தியாகி. பெருமையினால் பசி இல்லாத நேரத்திலும் தின்கிறானே அவன் துரோகி! நமது நாட்டிலே, கிட்டத்தட்ட நூறு கோடியர்களில் பாதிக்கு மேல் தியாகி, மீதி எல்லாம் துரோகி என்றால், படிப்பவருக்கு கோபம் வரலாம்! என்ன செய்ய.


129. உண்ட களைப்பு தொண்டருக்கு ஏன்?

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டல்லவா என்று எல்லோருமே, உண்ட பிறகு உறங்குவது சகஜமாகிவிட்டது.

தின்றவுடன் தூங்குவதுதான் புத்திசாலித் தனம் என்று திருப்திப்பட்டுக் கொள்வதிலும் உட்கொள்ளுதல் என்றால் எதற்கு? ஏன்? எப்படி என்றெல்லாம் யாரும் எண்ணியே பார்ப்பதில்லை.

பசிக்கு உணவு. பசித்துப் புசி என்பதும் பழமொழி.