பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மனித குலத்தை ஆள்வதும், அழிப்பதும் அச்சம்தான்.

அச்சம் என்றால் கலக்கம், கவலை, பீதி, புலம்பல், அதிர்ச்சி, பயம் என்று நமக்குத் தெரியும்.

ஆனால், இன்னொரு அருமையான அர்த்தம் அச்சம் என்றால் அடுப்பு என்பதுதான்.

பற்ற வைக்காத அடுப்பால் பயனில்லை. பற்ற வைக்கும் அடுப்பு பயன் தர வேண்டுமென்றால், பயன்படுத்துவதும் நல்லதாக இருக்க வேண்டுமல்லவா!

ஆனால் அடுப்பைப் பற்ற வைத்து விட்டால் எதையும் எரிக்கும். அனலாகக் கொதிக்கும்.

தீண்டப்படுகிறபோது வாடுவது அனிச்சப் பூ. வாடுவதற்காகவே வாழ்கிற அனிச்ச மல்ல மனித வாழ்க்கை.

உடலை மனதை எரிக்கிற அடுப்பாக அச்சம் இருக்கக்கூடாது. உணவைச் சமைக்க உதவும் அடுப்பு போல, நல்லதைச் செய்வதற்கான அச்சம் வேண்டும். எரித்துப் போடுகிற அடுப்பாக அச்சம் ஒருவருக்கு வந்தால் அந்த மனிதன் எந்த நாளும் உருப்பட மாட்டான்.


154. தினமும் ஆண்டும்

எதிர்பார்ப்பது நடக்காது போவதும், நடப்பது திகைப்பில் ஆழ்த்துவதற்கும், என்றாவது ஒருநாள் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளைத்தான் நாம் வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.