பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

47


53. தரமும் திறமும்

ஒரு காரியத்தைச் செய்கிறபோது தரமற்றவன், திறமற்றவன் என்று இன்றைய மக்கள் ஏசுவார்கள். வரம் பெற்றவன். சகலமும் கற்றவன் என்று நாளை மக்கள் பேசுவார்கள்.

இப்படித்தான் வரலாறு வழுக்கிக் கொண்டே போகிறது. அழுத்தமாக தன் அடிச்சுவடுகளைப் பதிக்கிறது. சரியோ தவறோ - துணிந்தவன் ஜெயிக்கிறான். பயந்தவனோ... பரிதாபமாக மரித்துப் போகிறான்.

பவித்திரன் கூட பாவியாகச் சித்தரிக்கப்படுகிறான். முத்திரை குத்தப்படுகிறான். ஆயிரம் கொலை செய்தவன் கூட வாய் ஜாலத்தால், வாரியிறைக்கிற பணத்தால் வள்ளல் ஆகிறான்; தெய்வம் ஆகிறான்.


54. வசதியும் வாய்ப்பும்

வாழ்கிற விதத்தில்தான் எத்தனை வளைசல்கள், ஒடிசல்கள். வசதியுள்ள ஒருவரை அண்டி வாழ்கிறபோது உடலுக்கு ஆறுதல் கிடைக்கிறது. வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஒண்டி வாழ்கிறபோது ஒருவித திருப்தி கிடைக்கிறது. எதையும் செய்யாமல் நொண்டி வாழ்கிறபோது விவேகமும் வீணாகிப் போகிறது. அதனால் தான் வாழ்க்கையைக் கழுதை என்றனர். முன்னால் போனால் கடிக்கிறது. பின்னால் போனால் உதைக்கிறது!