பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

87


அயர்ந்து தூங்குவது என்பது ஒரு அரிய கலை. தூக்கமில்லாமல் துடிப்பதும், துவள்வதும், துன்பப்படுவதும் மனித ஜாதியின் மாளாத வேதனை.

தூக்கம் என்பது இயற்கை மாதாவின் இனிய பரிசு. தூக்கத்தில் கனவுகள் வரும். ஆனால் கவலைகள் குறைகின்றன. கற்பனை ஆசைகள் மறைகின்றன. உடலுக்குள் தேய்ந்த செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பழுது பார்க்கப்படுகின்றன. அதனால் தூங்கி விழித்ததும் புத்துணர்ச்சி கிடைக்கிறது, புத்துணர்ச்சிக்காகவும், புதிய எழுச்சி பெறவுமே தூக்கம் தேவைப்படுகிறது. புத்திசாலி என்பவன் படுக்கையில் படுத்துக் கொண்டு சிந்திப்பவன் அல்ல. சிந்திப்பது எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். உண்ணும் இடத்திலும் உறங்கும் இடத்திலும் அல்ல.

முட்டாள் என்பவன் சிந்திக்கத்தெரியாதவன் அல்ல. சிந்திக்க இயலாதவன். அவன் வேலை உண்பது - உறங்குவது. உழைப்பாளிகளுக்கும் புத்திசாலிகளுக்கும் தூக்கம் நிச்சயம் தேவை. இந்த இரண்டு இடங்களிலும் எல்லோருமே முட்டாளாக இருப்பது எல்லாவிதத்திலும் நல்லது.

அறிவாளிகளுக்கு 6 மணி நேரம் போதும் என்பதெல்லாம் உடலுக்குப் போதாது. எட்டு மணிநேரம் என்பது உடலுக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது. இதயத்திற்கும் நல்லது.

இதை முட்டாளாக யோசிக்காமல், புத்திசாலிகளாக சிந்திப்பது நல்லது.