பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நிரப்ப முடியாத வயிறு. நிறுத்த முடியாத நோய்க்கூட்டம். நீக்க முடியாத வறுமை, நினைப்பிலும் தவிர்க்க முடியாத உற்பத்தி ஆசை.

இந்த நான்கு குழிகளை நிரப்பவே மனிதர்கள் நாயாய் அலைகின்றார்கள். கழுகாய்ப் பறக்கின்றார்கள். கழுதையாய் சுமக்கின்றார்கள். காளையாய் உழைக்கின்றார்கள்.

அந்தக் குழிகள் எப்போது தூர்ந்து போகும்? என்றால் குழிகளில் உள்ள அழுக்குகள் போக வேண்டும். அப்படி அசுத்தப்படுத்தும் அந்த பொல்லாத அழுக்குகள் போக வேண்டும்.

அப்படி அசுத்தப்படுத்தும் அந்த அழுக்குகள் என்ன தெரியுமா? அழுக்காறு என்கிற பொறாமை, அவா என்கிற ஆசை. பேராசை, வெகுளி என்ற கோபம். இன்னாச்சொல் என்கிற பாழ்பட்டச் சொல்.

இந்த நான்கு அழுக்குகளும் நான்கு குழிகளை விட்டு விலகிப் போனால், எளிதாகத் தூர்ந்து போகும். பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.


100. சுகாசனியும் மிதாசனியும்

சுகம் எங்கே கிடைக்கும்? சோறு கண்ட இடம் சொர்க்கம். சோறு உண்ணும் போது சுகம். அதனால் தான் திருமூலரும் மக்கள் எல்லாம் கலங்கிய நீர்போல் கிடப்பவர்கள். ஆனாலும் சோற்றுக்கு நின்று சுழல்கின்றவர்கள் என்கிறார்.