பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மன இருள்

இருளில் வழிதெரியாது தவிக்கும் பாதசாரி, ஏதாவது ஒன்றைத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்று சங்கற்பித்துக் கொண்டு, அதை நோக்கிச் செல்வதுபோல், தன் கணவர் நித்தியம் பூஜை செய்யும் கோவிலுக்குச் சென்று, கலங்கிய உள்ளத்திற்கு சாந்தியை நாடினாள். கோயில் மூலஸ்தானத்தின் இருளுக்கு இவளது மன இருள் தோற்றுவிட்டதாகத் தெரியவில்லை.

உலகத்தின் நிஷ்டூரம்

ஏழ்மை நிலைமையிலிருக்கும் பெண்கள் கொஞ்ச காலமாவது கன்னியாக இருந்து காலந்தள்ள ஹிந்து சமூகம் இடந்தராது. இவ்விஷயத்தில் கைம்பெண்களின் நிலைமையைவிட கன்னியர்களின் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப்பார்கள். ஆனால் ஒரு கன்னிகையோ வெனின், அவதூறு, உலகத்தில் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படுவாள். பணக்காரர்களான பூலோகத் தெய்வங்கள் மீது சமுதாயக் கட்டுப்பாட்டின் ஜம்பம் பலிக்காது.

சுத்த சைவன்

“இது தான் உம்முடைய குழந்தையோ?” என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை ஆவருக்கு. கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

56