பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix


நூலின் இயல்பு....

இலக்கிய விமர்சகர்

வல்லிக்கண்ணன்

புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதை உலகின் தலைசிறந்த சிறுகதை ஆசிரியர். தமிழ்ச் சிறுகதைத் துறையில் தமக்கெனத் தனியான புதிய தடம் வகுத்துக்கொண்டு முன்னேறி சாதனைகள் புரிந்துள்ளவர். தமது வழியில் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் உருவாவதற்கு உந்து சக்தியாக விளங்கியவர். அவர் மறைந்து இப்போது அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும்கூட. இன்னும் அழியாத புகழோடு நிலைத்து நிற்பவர். எனினும், புதுமைப்பித்தன் காலத்தில் அவரது சக எழுத்தாளர்களாக இருந்த சிலரே, அவர் மறைவுக்குப் பின்னர். அவரது இலக்கிய மதிப்பையும் அந்தஸ்தையும் சாதனைகளையும் குறைத்து மதிப்பிட்டு, வேறு சிலருக்கு ஏற்றம் அளிக்கும் காரியத்தை. இலக்கிய விமர்சனம் என்ற பெயரால் மிக நாசூக்காகவும் விஷமத்தனமாகவும் செய்து வந்துள்ளனர். அதுவுமின்றி, புதுமைப்பித்தனை ஒரு தழுவல் இலக்கிய கர்த்தா என்றும், இலக்கியத்திருட்டு செய்தவர் என்றும் குற்றம் சுமத்தவும் அரும்பாடுபட்டு வந்துள்ளனர். அத்தகைய குற்றச்சாட்டுக்களின் மெய்மை அல்லது பொய்மைகளை ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து, அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொ.மு.சி. ரகுநாதன் இந்த இலக்கிய ஆய்வு விமர்சன நூலை எழுதியிருக்கிறார். புதுமைப் பித்தனின் மேதைமையையும் சாதனைகளையும் குறைத்து மதிப்பிடச் சிலர் முனைந்ததற்கான காரணகாரியங்களையும் பின்னணியையும் ரகுநாதன் விரிவாகவும் விளக்கமாகவும் இந்நூலில் எடுத்துக்காட்டுகிறார்.