பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புதுமைப்பித்தன் கதைகள்


சாட்டுகின்ற சிட்டியும்; இந்நூலில் சில தகவல்களைத் தமது விருப்பு வெறுப்புக்களுக்கேற்பத் திரித்தும் மறைத்தும் திரையிட்டு மூடியும் தெரிவிக்கும் குற்றத்துக்கு உள்ளாகியுள்ளார் என்பதோடு, இவரும் விமர்சனம் என்ற பெயரால் சில விஷமத்தனங்களையும் புரிந்துள்ளார் என்பதை, எனது இந்த நூலின் பின்வரும் பக்கங்களில் உரிய இடங்களில் நான் விளக்கிக் கூறுவேன்.

மேற்கண்ட நூலில் ‘புதுமைப்பித்தனும் மாப்பஸானும்’ என்ற உபதலைப்பின் கீழ் புதுமைப்பித்தன் தழுவி எழுதிய மாப்பஸான் கதைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுவதற்கு முன்பே, எடுத்த எடுப்பில் முதல் பாராவிலேயே புதுமைப்பித்தன் மீது தழுவல் இலக்கியக் கர்த்தா என்ற முத்திரையைக் குத்தும் ஆர்வத்திலும் ஆத்திரத்திலும் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற தொகுப்பின் இரண்டாவது பதிப்பை (1955) விமர்சித்த பேராசிரியர் ரா.ஸ்ரீ.தேசிகன் அவருடைய கதைகளில் 'கவந்தனும் காமனும்' என்ற கதை ஆல்டஸ் ஹகஸ்லியின் (Aldous Huxley) கதையொன்றின் தழுவல் எனக் குறிப்பிட்டிருந்தார். இதே பேராசிரியர் 1940இல் இந்தத் தொகுப்பின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் மேற்சொன்ன அபிப்பிராயத்தைச் சொல்லவில்லை. அன்று புதுமைப்பித்தனின் இலக்கியப் புகழ் உச்சகட்டத்திலிருந்ததால் இத்தகைய குறைபாடு ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்று அவருக்குத் தோன்றவில்லை போலும்'

(தமிழில் சிறுகதை - வரலாறும் வளர்ச்சியும். பக் 155), மேற்கண்ட மேற்கோளில் எது உண்மை, எதெது பொய் என்பதை நான் கூறப்புகுவதற்கு முன்னால், இங்கு வேறோர் ஆய்வுரையைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.

பல்கலைக்கழகப் பட்டம் பெறுவதற்காக 1975-80 ஆண்டுகளில் புதுமைப்பித்தன் கதைகளையும் ஜெயகாந்தன் கதைகளையும் ஒப்பாய்வு செய்தவரும், சிட்டி, க.நா.சு., சி.சு. செல்லப்பா முதலிய மணிக்கொடி எழுத்தாளர்கள் பு.பி. பற்றிக் கூறிய சில கூற்றுக்களை வேதவாக்காக ஏற்றுக் கொண்டிருப்பவருமான வேதசகாயகுமார் என்ற ஆய்வாளர், 'புதுமைப்பித்தன் - கதைகளின் கதை' என்ற தமது கட்டுரை ஒன்றில் (காலச்சுவடு - இதழ் 11; 1995), 'புதுமைப்பித்தன் கதைகள், காஞ்சனை, ஆண்மை என்ற மூன்று தொகுப்புக்களும்