பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதுமைப்பித்தன் கதைகள் கட்டுரையின் முன்னுரை போன்று இலக்கிய கர்த்தாவின் உரைநடைக்குள்ள சிறப்புக்களைக் குறித்து, வழக்கம்போல் தமது ஆங்கில இலக்கியப் புலமையைக் காட்டிக் கொள்ளும் விதத்தில், கீட்ஸ், பேட்டர் முதலியோரின் கருத்துகளைத் தொட்டுக் காட்டிவிட்டு, புதுமைப்பித்தனின் 'உரைநடையின் நயங்களை' அவர் ஆராயத் தொடங்குகிறார். அவ்வாறு தொடங்கும்போது, 'புதுமைப்பித்தன் நூல்களைத் துருவிப் பார்ப்போர்களுக்கு, இவற்றில் ஒரு புதிய நாதம் எழுகின்ற உணர்ச்சி வராமற் போகாது. கற்பனைச் செறிவுக்கோ குறைவில்லை. அக் கற்பனை ஓட்டத்திற்கு உருக்கொடுக்கும் துணிச்சலான சொல்லாட்சியும் நம் உள்ளத்தைக் கவர்கின்றது. காஞ்சனை, சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற மூன்று கதைகள் இவருடைய விரிந்த கற்பனைக்குச் சான்றுகளாய்த் திகழ்கின்றன' என்று புதுமைப்பித்தனைப் பாராட்டும் முகமாகவே தமது கருத்துகளைத் தெரிவிப்பதுபோல் முதலில் இவர் காட்டிக் கொள்கிறார். இவர் இந்தக் கட்டுரையை எழுதிய 1959ஆம் ஆண்டு வாக்கில், புதுமைப்பித்தனின் கதைத் தொகுதிகள் எல்லாமே அச்சில் வெளிவந்துவிட்டன. என்றாலும், இவர் புதுமைப்பித்தனின் உரைநடைக்கு உதாரணங்களாக எடுத்துக்காட்டியுள்ள மேற்கோள்கள் அனைத்தையும் அலசிப் பார்க்கும்போது, இவர் புதுமைப்பித்தனின் 'காஞ்சனை' என்ற சிறுகதைத் தொகுதி ஒன்றை மட்டுமே தம்முன் வைத்துக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் என்பதைப் புதுமைப்பித்தனின் ரசிகர்கள் பலரும் புரிந்து கொள்ள முடியும். தேசிகன் தம் ஆராய்ச்சியை ‘ஒரு பேரச்சச் சூழ்நிலையைக் காஞ்சனையில் இவர் சித்திரிக்கிறார்' என்ற வரிகளோடு தொடங்கி, காஞ்சனை' கதையிலிருந்து பின்வரும் பகுதியை மேற்கோள் காட்டுகிறார், 'நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை மூட முடியவில்லை . எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ? இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்குப் படக்கென்று எதிர்பார்த்தது. ‘எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது. |