பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

பிரம்ம ராக்ஷஸ் நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு, அறிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது, அவன் கதை. அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்ப வில்லை, போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது, வைகறை போல் எழும் ஆசை எண்ணங் களைத் துருவி யறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளரவேண்டு மென்ற நினைப்பினால், அவன் ஏற்றுக் கொண்ட சிலுவை அது. அன்று முதல்.- ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற விழிப் பற்ற ஒரு சொப்பனாவஸ்தைபோல, மூலகாரணங்களாலும் நியதிகளாலும் ஏற்றுண்டு,ஜடத்திற்கும் அதற்கு வேறான பொருளுக்கும் உண்டான இடை வெளியில், அவன் அலைந்து திரிந்தான். ஆசை அளியவில்லை; ஆராய்ச்சி அவிந்து மடிந்து, நியதியை யிழந்து, விபரீதத்தில் தீவிர கதியில் சென்றது. அவன் இப்பொழுது வேண்டுவது, முன்பு விரும்பித் துருவிய இடைவெளி ஆராய்ச்சியன்று, சாதாரணமான மரணம். உடல் இருந்தால் அல்லவா மரணம் கிட்டும்! ஜடமற்ற இத் திரிசங்கு நிலையில் சமூகத் தில் அடிபட்டு நசுங்கியவர்கள் ஆசைப்படும். மோட்ச சாம்ராஜ்யம் போல, மரண லட்சியம் அவனுக்கு நெடுந் தூரமாயிற்று. அவன் அப்பொழுது நின்ற இடம்,அப்புறத்து அண்டமன்று; கிரக கோளங்கள் சுழலும் வெளியன்று: அது பூலோகந்தான். அவனுடைய வாசஸ்தலமாயிருந்த குகையின் பலிபீடத்தில் அவனுடைய ஆசையின் நிலைக்