பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியாயம்


தேவ இறக்கம் நாடார் - அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசையோ, எதுவானாலும் அவர் எப்பொழுதாவது ஒரு தடவை இந்த 'டமிலில்' எழுதுவது போலவே எழுதி விடுவோம். நல்ல கிறிஸ்தவர். புரோட்டஸ்டாண்ட், ஸர்கில் சேர்மனாக இருந்து, மிஷனில் உபகாரச் சம்பளம் பெற்று வருபவர். இந்த உலகத்திலே கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காகப் பாடு பட்டதனால் ஏற்படப்போக இருக்கும், இந்த உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்திருக்கிறார்.

ராஜ பக்தியும், சமூக சேவையும் ஒத்துவராத இந்தக் காலத்தில், மரியாதையாகச் சமூக சேவை என்று சொல்லப்படும் தமது பெஞ்சு மாஜிஸ்திரேட் பதவியில் கொஞ்சம் பெருமையுண்டு. ஒரே கல்லில் இரண்டு காக்கையடித்தால் பெருமையடையமாட்டார்களா? அவரும் மனிதன் தானே?

அவருடைய மதபக்தி, ராஜ பக்தியுடன் போட்டியிடும். ஞாயிற்றுக்கிழமை வரத் தவறினாலும், அவர் கடவுளால் கொடுக்கப்பட்ட அந்த ஓய்வு நாளில் கோவிலில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார். சில சமயம் பால்ராஜ் ஐயர் அவர்கள், ஓர் இருபதாம் நூற்றாண்டு இந்திய யோவான் ஸ்னானகனைப் போல், "ஏ! விரியன் பாம்புக் குட்டிகளே! உங்கள் பாபங்களை ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி, கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் வழியாக, அந்த மனுஷகுமாரன் வழியாக, பரமண்டலங்களில் இருக்கும் பிதாவை முழங்கால் படியிட்டு வேண்டிக் கொள்ளுங்கள். ஏ! விரியன் பாம்புக் குட்டிகளே!..." என்று உற்சாகமாகப் பிரசங்கிக்கும்பொழுது, தமது அருமை மேரிக் குஞ்சு முதல், அங்கு வந்திருக்கும் வெள்ளைக்கார பிஷப் உள்பட எல்லாம் இரட்டை நாக்குகளை நீட்டிக் கொண்டு நெளிவதுபோல் தோன்றும். வெகு உருக்கமாக மன்றாடுவதற்காகக் கண்களை இறுக மூடிக் கொள்வார். அவ்வளவு மதபக்தி. பைபிலை இந்த உலகத்துக்கே

புதுமைப்பித்தன் கதைகள்

99