பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரியான ஓர் இந்தியனின் பீனல் கோடாகவே மதித்தார். சமணரைக் கழுவேற்றியதாக மார் தட்டிக் கொள்ளும் திருவாளர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்குக் கூட அவ்வளவு இருக்குமோ என்னவோ?

அன்று கோர்ட்டில் கூட்டம் எப்பொழுதும்போல். நியூஸென்ஸ் சார்ஜ், லைசென்ஸ் இல்லாத குற்றம், சின்னத் திருட்டு, 'பெரிய' விவகாரங்களுக்குப் பிள்ளையார் சுழி, சின்னக் கடன் இத்யாதி.

பஞ்சபாண்டவர் மாதிரி இருந்த அந்த மாஜிஸ்திரேட்டுகள், வெகு ஊக்கமாக நியாயத்தை நிறுத்துப் பறிமாறிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஒரு கேஸ்தான் அப்பா!

ஒரு எஸ்.பி.ஸி.ஏ. இன்ஸ்பெக்டர், அவர் பிடித்த கேஸ், காயம் பட்ட குதிரையையும் வண்டிக்காரனையும் பிடித்த விதத்தை விரிவாகக் கூறிவிட்டு இறங்கினார்.

தேவ இறக்கம் நாடாருக்கு இந்த அநியாயமான குற்றத்தைக் கேட்டவுடன் தாங்கமுடியாத கோபம். இனிமேல் இம்மாதிரி நடக்காதபடி ஒரு 'முன்மாதிரி'யாகத் தண்டிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்.

"யாரு ஓம்பேரென்னா!"

"சொள்ளமுத்துப் புள்ளெ."

"சொள்ளமுத்து இன்னு சொல்லுமேவே, புள்ளை என்ன புள்ளை! கூண்டுலே ஏறுனாப்ப? நீரு புண்ணாப் போன குருதையெ வண்டிலே மாட்டலாமா? என்னா மரங்கணக்கா நீக்கிராவே; ஒமக்கு புத்தியில்லே? வாயில்லாச் சீவனை; ஊமையாகவே! என்ன நிக்கிரா?"

"தரும தொரைகளே! எங்குருதயெ புள்ளமாருதி வளக்கேன். வவுத்துக் கொடுமை; இல்லாட்டாகே நாம் போடுவேனா சாமி? இனி மேலே இப்பிடி நடக்காது சாமி. ஒரு தடவை, தருமதொரைக மன்னிக்கணும்."

"நல்லாச் சொன்னீரு! வேலையத்துப் போயாவே நாங்க இங்கெடந்து பாக்கம்? 5 ரூபா அவராதம்; தவறினா ஒரு மாசம். சரிதானே... அப்புறம்" என்று மறுபக்கம் திரும்பினார்.

சுடலைமுத்துப் பிள்ளை ஆவேசம் கொண்டவன்போல் ஓடிவந்து காலைப் பிடித்துக் கொண்டு, "தரும துரைகளே! இந்த ஒரு தடவை மன்னிக்கணும். புள்ளே குட்டி வவுத்துல அடியாதிங்க..."

"பின்னாலே போசாத்தானே!" என்று தேவ இறக்கம் நாடார் கர்ஜித்தார். கோர்ட் ஆர்டலி, சுடலைமுத்துப் பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியே போனான்.

இரவு, தேவ இறக்கம் நாடார் படுத்துக் கொள்ளுமுன் முழங்கால் படியிட்டு ஜபம் செய்கிறார்.


100

நியாயம்