பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பந்தம்


பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான் பாக்கி. அதையும் செய்து முடித்துவிட்டால் பையனைப் பற்றிய கவலை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தார் சங்கரலிங்கம் பிள்ளை.

ஒரு நாள் காலை. பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று தமது பத்தினியைக் கூப்பிட்டார்.

"என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்."

"நம்ம குட்டிக்கு" - பார்வதிநாதனின் செல்லப் பெயர் - "பொண்ணு பார்க்க வேண்டாமா?"

"எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லுதது சதி. நம்ப சிங்கிகுளத்துப் பொண்ணெப் பாத்தா என்ன? பொண்ணு நல்ல செவத்த பொண்ணு; கண்ணும் முளியும் அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆனா, புள்ளையவாளுக்குப் பிடிக்குமோ என்னமோ? இந்தக் காலத்துப் புள்ளையளை என்ன சொல்ல?"

"அதாரு, சிங்கிகுளத்திலே?"

"என்ன உங்களுக்குத் தெரியாதாக்கும்? பேட்டையக்கா இருக்காஹள்ள, பார்வதியக்கா, அவளுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மக."

"சரி! சரி! நம்ம சுப்பராயப்பிள்ளை மகளா? என்ன நகை போடுவா?"

"அது எனக்கென்ன தெரியும்? கோமதியக்காக்கிட்ட விசாரிச்சா தெரியும். நா அவளைக் கூப்பிடுதேன்" என்று வெளியே சென்று ஒரு விதவையைக் கூப்பிட்டு வந்தாள்.

"அம்மா, வா. இரி. நம்ம குட்டிக்கு இவ என்னமோ சிங்கி கொளத்துப் பொண்ணு ஒண்ணு இருக்காமே. அதைப் பாக்கலா-

புதுமைப்பித்தன் கதைகள்

113