பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழியாகக் குறைந்தது மூவாயிரமாவது கறந்துவிடவேண்டும் என்ற தீர்மானம்.

நாவன்னா - நாராயண பிள்ளை அவர் பெயர் - அவரை விட்டுப் பெண் வீட்டுக்காரரைத் தூண்டிவிடும்படி ஏற்பாடு செய்தார்.

நாராயண பிள்ளை ஒரு தடவை சிங்கிகுளத்துப் பக்கம் சென்றார். "நம்ம பையன் ஒருவன் இருக்கிறான். கொடுக்கலாம். நல்ல இடம்!" என்றார். விஸ்தரிப்பானேன்? பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டு பேசப் புறப்பட்டார். நண்பர் நாவன்னா வீட்டில் ஜாகை.

மறுநாள்.

இருவரும் சங்கரலிங்கம் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள்.

"அண்ணாச்சி, இவுஹதான் நம்ம சிங்கிகுளத்துப் பிள்ளையவாள். இந்தப் பக்கத்திலே வந்திருந்தாஹ பாத்துக்கிட்டுப் போகட்டுமே என்று கூட்டி வந்தேன்" என்றார் நாவன்னா.

"அப்பிடியா! வாருங்க! வாருங்க! ஏளா! வெத்திலை செல்லத்தை எடு. அங்கே தூத்துட்டு சமுக்காளத்தை விரி! காப்பி சாப்பிடுங்களேன். அம்மாளு ரெண்டு எலையைப் போடு!" என்று துரிதப்படுத்தினார்.

அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச் செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

"நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்டு வந்துவிடுங்கள்" என்றார் நாராயண பிள்ளை.

"நான் எல்லாம் ஆச்சு! வெத்திலைப் போடுங்க" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.

பேச்சு மெதுவாகப் பெண் விஷயத்தில் வந்து விழுந்தது.

"ஆமாம்! பையனுக்கு வேலையும் ஆச்சே, முடிச்சுவிடலாம் என்று எண்ணுகிறேன்" என்றார்.

"ஆமாம் அது செய்ய வேண்டியதுதான்" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.

"உங்களுக்குத் தெரியாததா? நகை ஒரு ரெண்டாயிரம், மத்தச் செலவு ஒரு ஆயிரம்!" என்றார்.

"என்ன, நம்ம பேட்டையப்பிள்ளை சொன்னதைக் கேட்டியள்ள?" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.

"ஆமா, ஆமா. அதிருக்கட்டும். இந்தக் காலத்திலே ஆயிரத்தைச் சொன்னாப் போதுமா? சொன்னதைச் சொன்னபடி செய்யணும்.

புதுமைப்பித்தன் கதைகள்

115