பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்படி ஆரம்பிப்பது? கோபித்துக்கொள்வாரோ என்னவோ, பக்குவமாகச் சொல்லிப் பார்த்தால் என்ன குடிமுழுகிப் போகிறது?

"தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே!" என்று மனமறிந்து பொய் கூறினேன்.

"பார்த்திருக்க முடியாது!"

இது தடையுத்தரவு மாதிரி இருந்தது. இருந்தாலும் இன்னொரு தடவை.

"எனக்குப் பசி பிராணன் போகிறதே! தங்களுக்கு உடம்பிற்கு என்ன?" என்று காப்பிக் கோப்பையைக் கூர்ந்து நோக்கினேன்.

"பசியாமல் ஏன் ஓட்டலுக்கு வரவேண்டும்?" என்றார்.

"மறந்து போயிருக்கும்; அதனாலென்ன? நீங்கள் இன்று என்னுடைய விருந்தினராக இருக்க வேண்டும், இன்று என் பிறந்த நாள்!" என்றேன்.

"காசைக் கண்டபடி இறைக்காதேயும்!" என்றார்.

"பாதகமில்லை. தயவுசெய்து..." "சரி, உமதிஷ்டம்" என்றார். இருவரும் குதூகலமாகச் சாப்பிட்டோ ம். குதூகலம் என்னுடையது. அவர் மௌனமாகத்தான் சாப்பிட்டார். இடையிலே இரண்டொரு வார்த்தை சிக்கனமாக இருப்பதைப் பற்றி. வெகு கூச்சமுள்ள பிராணி போலும்! இந்த ரகத்தை எனக்கு நன்றாகத் தெரியும். இலக்கியத்தில் இது எதிர்பார்க்கக் கூடிய விஷயமே. மிகவும் கஷ்டப்பட்டவர். அதனால்தான் சிக்கனத்தில் அதிகக் கருத்து!

ஒரு குழந்தையைப் போஷிப்பதைப் போல் மனம் கோணாமல் நாஸுக்காகச் செய்தேன். 'பில்' ஏறக்குறைய ஒரு ரூபாயை எட்டிவிட்டது.

எழுந்திருந்தோம். மௌனமாக அவர் முன் சென்றார்.

பணத்தைக் கொடுக்கச் சில நிமிஷம் தாமதித்தேன்.

நேராக வெளியே சென்று ஒரு பளபளப்பான 'ஹில்மன்' காரில் கூசாமல் ஏறி உட்கார்ந்தார் அந்த மனுஷர்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பைத்தியமோ என்ற சந்தேகம்.

மோட்டார் டிரைவர் இயற்கையான சாவதானத்துடன் காரை விட்டுக்கொண்டு போய்விட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

'ஹோட்டல் காஷியர்' என்னமோ தெரிந்தவர் போல் விழுந்து விழுந்து சிரித்தார்.

நான் விழித்தேன்.

"அவன் பெரிய லக்ஷாதிபதி, பெரிய கருமி, கஞ்சன். யார் தலையையும் தடவுவதில் - இந்தச் சாப்பாட்டு விஷயத்தில்தான் - ஒரு பைத்தியம். இன்று நீர் அகப்பட்டுக்கொண்டீர் போலிருக்கிறது!" என்றார்.


118

திறந்த ஜன்னல்