பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்றி

புதுமைப்பித்தனின் ஏழு கதைகளுக்கு முதல் வெளியீட்டு விவரங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை; நான்கு கதைகளுக்கு நம்பகமான பாடம் கிடைக்கவில்லை; இரண்டு கதைகளின் முதல் வடிவம் வெளிவந்த இதழ்களை அறிந்திருந்தும், அவற்றை வைத்திருப்பவர் அவற்றைப் பார்வையிடவும் அனுமதி மறுக்கும் நிலை - இவ்வாறு சில மனக்குறைகள் இருந்தாலும், 'அன்னை இட்ட தீ’ முன்னுரையில் வாக்களித்தவாறு 'புதுமைப்பித்தன் கதைக'ளின் முழுத் தொகுப்புச் செம்பதிப்பாக வெளி வந்துவிட்டது.

இந்த மகிழ்ச்சியை, இதற்கு உதவிய அன்பர்களுக்கு என் நன்றியறிதலைப் புலப்படுத்துவதோடு, வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எளிய செயல்கள்கூடப் பலரின் ஒத்துழைப்போடுதான் இயல்வதாகும் என்னும்போது, பெரிய வினைப்பாடுகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஓட்டைப் பானையிலும் கொழுக்கட்டை வேவதற்கு வழி செய்தவர் பலர்.

புதுமைப்பித்தன் படைப்புகள் அனைத்தையும் செப்பமாக வெளியிடுவதென முடிவெடுத்ததுமே, பதிப்பு நெறியினை முதலிலேயே வகுத்துக் கொள்வது தேவை என்று உணர்ந்து, இது தொடர்பாகப் புதுமைப்பித்தன் அன்பர்களைக் கலந்துகொள்வதென முடிவு செய்யப்பட்டது. பதிப்புச் சிக்கல்கள் பற்றி நான் தயாரித்த வரைவு அன்பர்களின்முன் வைக்கப்பட்டது. . 19 ஏப்ரல் 1998 அன்று நாகர்கோவிலில் ஒரு முழுநாள் பதிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கை முழுவதும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டது. திரு சுந்தர ராமசாமி, முனைவர் எம். வேதசகாயகுமார், முனைவர் பா. மதிவாணன், முனைவர் பழ. அதியமான், திரு. ராஜமார்த்தாண்டன், திரு. கி. அ. சச்சிதானந்தன்,

திரு. எம். சிவசுப்ரமணியன் (எம்.எஸ்.), திரு. வே. மு. பொதியவெற்பன், முனைவர் அ. கா.பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். உடல் நிலை காரணமாகத் திரு. தொ. மு. சி. ரகுநாதன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. ஆயினும், அதற்கு முந்தியநாள் இரவு அதியமானும் மதிவாணனும் நானும் அவரது நெல்லை வீட்டில் கண்டு பேசி அவர் கருத்துகளைப் பெற்றுக்கொண்டோம். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தம் கருத்துகளைத் தெரிவித்து உதவியதோடு, இப்பணிக்கு ஒத்துழைப்பை நல்குவதாகவும் வாக்களித்தனர். பதிப்பு

11