பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனி ஒருவனுக்கு


ம்மாசிச் சாம்பான் பிறப்பில் பிச்சைக்காரன் அல்ல. இவன் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே இவனுடைய தகப்பனார் பாவாடை காலமாகி விட்டான். வீட்டிலிருந்த சொத்தை (கலப்பை முதலியன) சின்னக் கடன் விஷயங்களுக்கு, சேரி பாபத்திலும், பண்ணை சுப்பராயப் பிள்ளை பற்றிலு மாக பறிமுதல் செய்யப்பட்டது.

இவனுடைய வளர்ச்சிப் படலத்தைப் பற்றிய பிள்ளைத் தமிழ் யாரும் எழுதிவைக்காமல் போய்விட்டதால் இருபது வயது வரைமட்டுமுள்ள சரித்திரக் குறிப்புகள் கிடைக்கவில்லை. கொஞ்சநாள் பண்ணையில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிகிறது. பிள்ளையவர்கள் மனமுவந்து கொடுத்த சிறிய கடன் தொகையைக் கொண்டு கலியாணமும் நடந்தது. நடந்த மூன்றாம் மாதம் இவன் தாய் பரகதி - பறையருக்கு பரகதியடைய உரிமையுண்டோ என்னவோ - செத்துப் போய்விட்டாள்.

என்ன காரணத்தாலோ இவனது பெண்டாட்டியும் தாய் வீடு நோக்கிக் கம்பி நீட்டி விட்டாள். ஆக இம்மாதிரி தொல்லைகளால் பழைய கடனும் கொடுக்க முடியாமல் புதிய கடனும் வாங்க மார்க்கமில்லாமல் இருக்கும் பொழுது ஒரு ரஸவாத பண்டிதர் - சாமியார் - அங்கே வந்து சேர்ந்தார்.

சாமியாருக்கும் அம்மாசிக்கும் எப்படியோ பழக்கம் ஏற்பட்டது. கேட்பானேன்; பிள்ளையவர்கள் வீட்டுப் பித்தளை செம்புப் பாத்திரங்களில் கை வைத்தால், அவ்வளவையும் சுவர்ணமாக்கித் தந்து விடுவதாகச் சுவாமியார் வாக்களித்தார்.

தொல்லை தீர வழியிருக்கும்பொழுது தர்ம சாஸ்திரமா குறுக்கே நிற்க முடியும்? பண்ணைப் பிள்ளையவர்களின் பாத்திரங்கள் ஊருக்குப் பக்கத்திலிருந்த பாழ் மண்டபத்திற்கு வந்துவிட்டன. ஸ்புடம் போட்டுத் தங்கமாக்கிவிட. இதற்குள் பிள்ளையவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட, "பயலை அப்படியே புடம் போட்டுவிடுகிறேன் பார்" என்று இரைந்து கொண்டு பண்ணை ஆட்களைத் திரட்டி வந்தார்.


120

தனி ஒருவனுக்கு