பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்களூர் மறவர்களுக்கு 'பிஸினஸ் டல் ஸீஸனில்' சுடலைமாடன் பாடு கொண்டாட்டம்தான். தினம் திருவிழா. நாலு பணத்தைக் கண்டால் சுடலைக்கு படைப்பு என்ற சம்பிரதாயத்தை வைத்துக் கொண்டு, குடித்துக் களிப்பார்கள்.

அன்று சின்னச்சாமித் தேவனுக்குப் படைப்புப் போட வேண்டும் என்று தோன்றிற்று. கேட்பானேன்; சாயங்காலம் முதல் ஒற்றைப்பறை மேளம் ஒன்று சுடலைமாடனுடைய கேட்காத திருச்செவிகளுக்குச் சங்கீதக் கச்சேரி நடத்தியது.

படைப்புக்குரிய பொங்கல், பக்கத்து மரத்தடியில் சின்னச்சாமித் தேவன் மனைவியின் கண்காணிப்பில் தயாராகிக்கொண்டிருந்தது. மாடனைச் சுற்றி தேவரும் அவருடைய நண்பர்களும் பூசாரியும்தான்.

இரவு பத்து மணியாகிவிட்டது. பானையும் அடுப்பிலிருந்து இறங்கி 'சாம்போர்' என்று அவர்கள் உச்சரிப்பில் மரியாதை பெறும் குழம்புடன் கலந்து, சுடலையின் திருச்சேவையை எதிர்பார்த்து நின்றது.

பூசாரி சுடலையின் பாட்டைப் பாடி ஆராதனை நடத்துகிறான். தேவரின் மனைவியும் சுடலையின் அருள்பெறச் சன்னதிக்குச் சென்று விட்டாள்.

இருளிலே ஒரு உருவம் நகர்ந்து நகர்ந்து சோற்றுப் பானையை அணுகுகிறது. சுவாமியார்தான். பசியின் தனியரசிற்குமுன் எந்தச் சுடலைமாடன் தான் எதிர்க்க முடியும்? வாரி வாரி ஆத்திரத்துடன் கொதிக்கும் சோற்றை வாயில் திணிக்கிறார். அவ்வளவுதான், ஒரு கவளத்திலே இவருடைய இவ்வுலக ஆசை நிறைவேறியது.

சற்றுத் தூரத்திலிருந்த சுடலை பக்தர்கள் இவர் ஒரு கவளம் எடுக்கும்போதே கண்டு தடுக்க ஓடிவந்தார்கள். கிட்ட நெருங்கியதும் தண்டிப்பதற்குச் சுவாமியாரின் பிணம்தான் கிடந்தது. "மாடனின் சக்தி", "அருள்" என்று வியந்தார்கள். "பறப்பயலுக்கு வேண்டும்" என்றார்கள். இதையெல்லாம் கேட்க ஏழை அம்மாவாசைச் சாமியாருக்கு கொடுத்து வைக்கவில்லை!

சுடலையின் சக்திக்காக அன்று இரட்டிப்புப் பூசை.

3

ஊரில் கொஞ்சம் பரபரப்புத்தான். சுடலையின் சக்தி வெளியாகும் பொழுது இல்லாமலா இருக்கும்?

திடீரென்று இறந்தவனை அறுத்துச் சோதனை செய்யாமல், போலீஸ் விசாரணையில்லாமல் புதைத்துவிட முடியுமா? எங்களூர் டாக்டரும் இன்ஸ்பெக்டரும் தேசபக்தர்கள் அல்ல; ஆனால் கிழக்கு மேற்காக இரண்டரைப் பர்லாங்கும், தென்வடலாக ஒன்றரைப் பர்லாங்கும் விஸ்தீரணமுள்ள எங்களூர் நிலப்பரப்பைப் பொறுத்தமட்டில் தேசபக்தர்கள் தான். வீண் ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்

புதுமைப்பித்தன் கதைகள்

123