பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெறி பற்றிய தெளிவு ஏற்படுவதற்கு இவர்கள் கருத்துரை மிக்க உதவியாக இருந்தது. முனைவர் எம். வேதசகாயகுமார் இந்தப் பதிப்புத்திட்டமே பிழையென்றும், இதற்குப் பொறுப்பேற்றவர் இதனைச் செய்து முடிப்பதற்குரிய தகுதியும் ஆற்றலும் உடையவரல்லர் என்றும் வலுவாக எடுத்துரைத்து, இதற்கு எவ்வகையிலும் உதவ இயலாதெனக் கூறிவிட்டார். அவருடைய கருத்துகளும் பதிவு செய்து கொள்ளப்பட்டன.

புதுமைப்பித்தன் படைப்புகளைக் காலவரிசையில், திருத்தமான பாடத்தோடும், பாடவேறுபாடுகளோடும் பதிப்பிப்பது எனத் தீர்மானித்ததும், அவை முதலில் வெளியான மூல இதழ்களையும், அவை நூலாக்கம்பெற்ற முதல் பதிப்புகளையும் தேடி எடுக்க வேண்டியிருந்தது. சான்று மூலங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்வது என்பதற்குப் பதிலாக, சான்று மூலங்களைத் தேடுவதே தமிழ் ஆய்வுலகில் பெரிய ஆராய்ச்சி என்பதாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில், பழம் இதழ்களைப் பாதுகாத்து, ஆய்வாளர்களுக்குப் படிக்க வசதி செய்துதரும் நூலகங்களையும் அவற்றின் பொறுப்பாளர்களையும் சப்பரத்தில் வைத்துச் சுமந்து சென்றாலும் சரியே. அவர்களுள் முக்கியமானவர்கள்:

சென்னை மறைமலையடிகள் நூல் நிலையமும் அதன் செயலாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களும்; சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் அதன் முதல் இயக்குநர் (மறைந்த) திரு. ப. சங்கரலிங்கம் அவர்களும் இன்றைய இயக்குநர் திரு. சு. தியடோர் பாஸ்கரன் அவர்களும்; சென்னை உ. வே. சாமிநாதையர் நூல் நிலையமும் அதன் பாதுகாவலரும்; தமிழ்நாடு ஆவணக்காப்பகமும் அதன் சிறப்பு ஆணையாளரும்; காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூல் நிலையமும்; புதுக்கோட்டை மீனாட்சி நூல் நிலையமும் அவற்றின் உரிமையாளர்களான திரு. பா. கிருஷ்ணமூர்த்தி, திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி இணையரும்; ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தற்கால வரலாற்றுக்கான ஆவணக்காப்பகமும், அதன் தலைவர் பேராசிரியா கே. என். பணிக்கர் அவர்களும்; தமிழ் இலக்கிய வரலாற்றுப் பேரறிஞர் மறைந்த மு. அருணாசலம் அவர்களின் தனி நூலகமும், அதன் உரிமையாளர் திரு. அ. சிதம்பரநாதன் அவர்களும்; ஆண்டிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நூலகம்.

இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் இந்தியா அலுவலக நூலகப் பிரிவில் சில முதல் பதிப்புகளையும். சிகாகோவிலுள்ள ஆய்வு நூலகங்களுக்கான மையத்தில் 'மணிக்கொடி'யின் நுண்படச் சுருளையும் பார்வையிட்டுப் படியெடுக்க முடிந்தது. சிகாகோவில் இதற்குரிய ஏற்பாடுகளை எனக்குச் செய்து கொடுத்தவர், சிகாகோ பல்கலைக் கழகத தெற்காசியப் பிரிவின் நூலகர் திரு. ஜேம்ஸ் நை.

மருங்கூர்.சண்முகானந்த நூல் நிலையத்தில் சில முதல் பதிப்புகள் கிடைத்தன. இதற்கு உதவியவர்கள் முனைவர் தே. வேலப்பன், முனைவர் அ. கா. பெருமாள்.

12