பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது! இதில் வாழும் கிரந்த கர்த்தா மனமிடிந்து பாழாய்ப் போவான்; ஆனால் சிங்காரவேலு இப்படி நாசமாவதற்குக் கோழையல்லர். தைரியத்தினால் ஏற்பட்ட மனக் கசப்பு அவரை ஒன்றும் எழுதவிடவில்லை.

அவர் சமூகத்தில் நம்பிக்கை வைத்த மனிதர். ஓடித் தளர்ந்த சிந்தனைகள் எல்லாம், ஈட்டி குத்தும் மாதிரி, கதைகளைச் சிருஷ்டித்தன.

அன்று...

எப்பொழுதும்போல் அந்தத் தனியறையில் பாயில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

வெற்றிலையை மென்று மென்று துப்பியாகிவிட்டது.

என்ன செயற்கை ஊக்கம் கொடுத்தாலும் அந்தக் கதையைத் தொட முடியவில்லை.

ஏழு நாட்களாக இந்தக் கதிதான்.

கையிலிருந்த பேனாவையும் காகிதத்தையும் கீழே பொத்தென்று போட்டார்.

பின்புறமிருந்த தலையணையில் சாய்ந்துகொண்டு, வெற்றிலைச் செல்லத்தைப் பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டு, வெற்றிலை போட ஆரம்பித்தார்.

அதுவும் ஒரு கலை - அவருக்கு.

தெரு வாசற்படியில் யாரோ வருவதுபோல் காலடிச் சப்தம்.

"சிங்காரம்!" என்ற குரல்.

"சுந்தரமா? வா!"

அவருடைய நண்பர் சுந்தரம் வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, "என்ன வெளியே போகலாமா? மணி ஐந்திருக்குமே!" என்றார்.

"வெற்றிலையைப் போடு, முதலில்!"

"என்ன, இன்னும் கதையை முடிக்கவில்லையே! ஆரம்பம் வெகு ஜோராய் இருக்கிறது. சீக்கிரம் முடியுங்கள்!"

"ஆமாம், வேலையில்லை! எழுதித் தூக்கி நிறுத்துகிற அவசரம் ஒன்றுமில்லை. என்னடா, நல்ல கதையை ரஸிக்கிறதற்கு ஒரு பயலும் இல்லை. சும்மா எழுது எழுது என்றால்! நான்கு பகுத்தறிவற்ற குயில் இல்லை. எனக்கு நான் எழுதுவதைச் 'சரி, நன்றாயிருக்கிறது' என்று சொல்ல நான்கு பேர்கள் வேண்டும். சுற்றி ஒன்றுக்குமற்ற கழுதைகளை வைத்துக்கொண்டு என்ன செய்கிறது?" என்றார் சிங்காரம்.

"ரஸிக்கிறதற்கு நாங்கள் எல்லாரும் இல்லையா?" என்றார் சுந்தரம்.

புதுமைப்பித்தன் கதைகள்

137