பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அது ஒரு புதிய மானத உலகத்தையே திறந்து காண்பிக்கிறது. அதைப் பற்றிப் புகழ்வதற்கு, நானும் ஓரளவு எழுதும் பயிற்சி பெற்றவனாக இருந்தால் எனது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே எடுத்துரைப்பேன். ஆனால் அந்தோ, அவ்வளவும் மூங்கையன் கண்ட கனவாகவே இருக்கின்றன. இன்னும் தங்கள் எண்ணிறந்த கதைகளை விடாது படித்துவந்தவர்களில் நானும் ஒருவன். இன்னும் புதிய கற்பனைகளை, கனவு லோகங்களைச் சிருஷ்டிக்க இறைவன் தங்களுக்குப் போதிய சக்தி அருளுவானாக.

இப்படிக்கு,
தங்கள் விதேயன்,
நாகப்பன்.

கடிதத்தை வாசித்ததும் முகம் மலர்ச்சியடைந்தது. உள்ளம் பூரிப்படைந்தது. குதூகலம் பிறந்தது. மறுபடியும் வாசித்தார். இன்னொரு முறையும் வாசித்தார். அந்தக் கடிதம் அவருடைய ஒரு பெரிய தாபத்தைத் தீர்த்தது.

"நீ ஒருவன் தான் - எண்ணிறந்தவர்களில் ஒருவனல்லன்! சமூகத்தில் கொஞ்சம் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. முழுமோசமில்லை!" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

கடிதத்தைச் சுந்தரத்திற்குக் காட்ட வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதில் என்னதான் இருக்கிறதோ? மறுபடியும் படிக்க ஆரம்பிக்கிறார். நாகப்பனுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதவேண்டும் என்று நிச்சயித்தாகிவிட்டது.

மறுபடியும் படிக்க ஆரம்பித்த பிறகு மனது திடீரென்று மாறுகிறது. சில சில எழுத்துக்கள் தமக்கு அறிமுகமான யாரோ ஒருவரின் கையெழுத்து மாதிரித் தெரிகின்றன. ஆமாம்! யாரோ நமக்குத் தெரிந்த பயலுடைய வேலைதான். இல்லாவிட்டால் என் விலாசத்தை விசாகப்பட்டிக்கு யார் கொண்டுபோய்க் கொடுக்கப்போகிறார்கள்.

இந்தப் புளுகு மூட்டையை என்னிடமா அவிழ்க்க வேண்டும்? சீச்சீ! முட்டாள்! கோழை! தைரியமிருந்தால், உண்மையில் ரஸித்தால், பகிரங்கமாகப் பத்திரிகைக்கு ஏன் எழுதக் கூடாது? அவன் ரஸித்தது என் சிநேகத்திற்காகத்தான். சீ! இதை எழுதிவிட்டால் எனக்குத் திருப்தி, சாந்தி, எல்லாக் குட்டிச்சுவரும் வந்துவிடுமென்று எண்ணினானாக்கும்! முட்டாள்! அவனும் இந்தச் சமூகத்தில் ஒரு ஜந்துதானே! இந்த முட்டாள் கூட்டத்திற்குக் கதை எழுத வேண்டுமாம், கதை! அதைவிடக் கசையடி கொடுப்பேன்! முட்டாள்கள்! தரித்திரக் கழுதைகள்! நாளைக்கு வரட்டும்! கதை வேண்டுமாம், கதை!

இந்தப் பயல்கள் சாவகாசமே வேண்டாம். தொலைந்தால்தான் இந்தப் பீடை ஒழியும். உண்மைப் பற்றுதலைக் காண்பிக்க தைரியமில்லாத கோழைகள்! கடிதம் எழுதினானே கடிதம், என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டானா? சீச்சீ! முட்டாள்!

புதுமைப்பித்தன் கதைகள்

139