பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயர்திரு அண்ணாச்சி அவர்களுக்கு, நம்ம விஷயத்தை கொஞ்சம் தாங்கள் துரிசாப் பார்க்கணும். இன்று சாயங்காலம் மேற்படி விஷயத்திற்கு வருவேன். மறக்கக்கூடாது.

இப்படிக்குத் தங்கள்
உயிர் நண்பன்
பூவையாப் பிள்ளை

என்று வாசித்தார்.

"சதி. அண்ணாச்சிக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்கணும். நெறுக்கிறாஹ. ஏட்டி நீ சவுந்திரத்தை அனுப்பு" என்று சொல்லிவிட்டார்.

கொடுக்க வேண்டியது 500 ரூ. அதிகமாக 200 ரூ. சேர்த்துப் பாங்கிற்குச் செக் எழுதியாகிவிட்டது. எதற்கு? எல்லாம் புஸ்தகத்திற்குத்தான்.

"ஏலே! சவுந்திரம், இதைப்போய் மாத்திக்கிட்டு சுறுக்கா வா. மணி பதினொண்ணு ஆயிட்டுதே! போ! போ!" என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த 'செந்த அவஸ்தா' முதல் பாகத்தில் தன்னை மறந்து விட்டார்.

ஒரு மணிநேரம் கழிந்தது. சவுந்திரமும் வந்துவிட்டான்.

எல்லாம் 100 ரூ. நோட்டுக்கள். சட்டைநாத பிள்ளை தன்னை மறந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமாகச் செய்பவர். வந்த நோட்டுக்கள் நம்பரை எல்லாம் குறித்துக் கொண்டார். அப்பொழுதும் ஜரத்துஷ்டிரனுடைய மொழிகளில்தான் மனம். அதை யோசித்துக் கொண்டே ஐந்திற்குப் பதிலாக ஆறு நோட்டுக்களை எடுத்துக் கொண்டு பூவையாப் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்.

பூமிநாத பிள்ளையின் பூஜை முடியும் சமயம்.

"அண்ணாச்சி வரணும், வரணும், ஏது இந்தப் பக்கமே காணமே. ஒரு நிமிட்" என்று பூஜையின் 'கியரை' மாற்றி வேகத்தை அதிகப்படுத்தினார். 'மந்திரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு இத்யாதி, இத்யாதி; முற்றிற்று; திருச்சிற்றம்பலம்' என்று முடித்துவிட்டு, "என்ன அண்ணாச்சி? என்ன விசேஷம்" என்றார்.

"ஒண்ணுமில்லை, அந்த விசயத்தை முடுச்சிக்கிடலாம் என்று வந்தேன்"

"ஏது நம்ம துண்டில் ஏதும் மனத்தாங்கலாக எழுதிட்டேனோ?"

"அதொண்ணுமில்லே. கையிலிருக்கப்ப குடுத்திடலாமென்று நினைச்சேன். எனக்குத்தான் மறதியாச்சே" என்று நோட்டுப் பொட்டணத்தைக் கையில் கொடுத்தார். அவர் பிரித்துப் பார்ப்பது போல் கவனித்து விட்டு மடியில் வைத்துக் கொண்டார்.

"சரியாப் பாருங்க."

"அதுக்கென்ன! எல்லாமிருக்கும், எங்கே போகுது?"

"அண்ணாச்சி நம்மகிட்டே ஒரு விசயமில்லா?..."


144

நன்மை பயக்குமெனின்