பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தியாகமூர்த்தி


செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த,

தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம் தானே வந்தால் இங்கு விடுவானே தோணி

என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே மேலே சொல்ல முடியும்.

தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் தோணி விடக்கூடிய அந்த ஆற்றிற்கு ஒரு தாம்போதி, மேற்கே இருக்கும் செங்காணியையும் கிழக்குக் கரையில் இருக்கும் தருவைத் திருப்பதியையும் பிணித்து நின்றது.

தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம். அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு என்ற முறையில் சின்னாபின்னமாக நின்ற ஒரு குடிசையில் இருபது வருஷங்களுக்கு முன் ராமசாமிப் பத்தரின் திருஅவதாரம் இனிது நடந்தேறியது.

தகப்பனாரைப் போல் ஓட்டைக் கட்டை வண்டிக்குப் பட்டை போடுவது, பஞ்சத்தில் அடிபட்ட மாடுகளுக்கு லாடம் அடிப்பது, பொழுது போக்காக ஆணிகளைச் செய்து குவிப்பது என்ற கொல்ல சமூகத்தின் வைதிக நடவடிக்கைகளுக்கும், காலம் இருக்கிற தர்பாரில், தனது அபூர்வமான புத்தி விசாலத்திற்கும் ஒத்துவராது என்று கண்ட ராமசாமிப் பத்தர், தலைமுறை தலைமுறையாகத் தம் தகப்பனார் வரையில் வந்த செங்காணி மான்மியத்தை முடித்துக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று குடியேறினார்.

முதலில் 'ஸைக்கிள்' 'கடிகாரம்' ரிப்பேரில் ஆரம்பித்து, வரவர 'மோட்டார் கண்டக்டர்', 'டிரைவர்', பிறகு 'மெக்கானிக்' என்ற

புதுமைப்பித்தன் கதைகள்

149